கடலூர் காசாளரை தாக்கி ஒயின்ஷாப்பில் கொள்ளையடித்த 3 பேர் கும்பல் அதிரடி கைது

புதுச்சேரி,  ஜன. 6: புதுச்சேரி ஒயின்ஷாப்பில் பணியாற்றும் கடலூரைச் சேர்ந்த காசாளரை  தாக்கி பணம் கொள்ளையடித்த 3 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர்  கனகசபை (48). இவர் மேட்டுப்பாளையம் மெயின்ரோடு கணபதி நகரில் உள்ள ஒரு  தனியார் ஒயின்ஷாப்பில் காசாளராக பணியாற்றி வருகிறார். 4ம்தேதி இரவு அவர்  பணியிலிருந்த போது அங்கு வந்த 4 பேர், 8 பீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு  பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். அவர்களை காசாளர் கனகசபை தடுத்து  நிறுத்தி பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த கும்பல் நாங்கள் யாரென்று  தெரியுமா? என கேட்டு ஒயின்ஷாப் உள்ளே புகுந்ததோடு கத்தியால் கனகசபையின்  முகம், கழுத்தில் வெட்டினர். இதை தடுக்க முயன்ற ஒயின்ஷாப் ஊழியரான  லாஸ்பேட்டை, முத்துலிங்கபேட்டையைச் சேர்ந்த ராஜா என்ற ராஜதுரைக்கும் (22)  கத்திவெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்த கல்லா பெட்டியிலிருந்த  ரூ.60 ஆயிரத்தைக் கொள்ளையடித்த 3 பேர் கும்பல் அங்கிருந்து  தப்பிஓடிவிட்டது. தகவலின்பேரில் ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்  தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு  காயங்களுடன் போராடிய காசாளர் கனகசபை, ராஜா இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக 2 பிரிவுகளின்கீழ் அடையாளம்  தெரியாத கும்பல் மீது வழக்குபதிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.  ஒயின்ஷாப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு  செய்தனர். இதில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தனர். இதையடுத்து  இவ்வழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் ரவுடியான புளியங்கொட்டை என்ற ரங்கராஜன்  (24), பொறையூர் முகேஷ் என்ற முருகையன் (22), மேட்டுப்பாளையம் ஷாருகான்  (22) ஆகிய 3 பேரை தனிப்படை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அதிரடியாக  விசாரித்து வருகிறது.

விசாரணையில் ரவுடிகளான இவர்கள், ஒயின்ஷாப்பில்  புகுந்து காசாளரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.  தொடர்ந்து 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார்  நாளை கோவிட் பரிசோதனைக்கு அவர்களை ஜிப்மரில் சேர்க்க உள்ளனர். அதன்பிறகு  அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இதில் ரவுடியான  புளியங்கொட்டை ரங்கராஜன் மீது மேட்டுப்பாளையத்தில் 2 கொலை வழக்கு,  வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளன. இதேபோல் முகேஷ் மீது வானூரில் ஒரு  கொலைவழக்கும், புதுச்சேரியில் அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>