*தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்தது
நாகர்கோவில் : ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் ஒருபோன்று இருந்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை டிசம்பர் 4ம் தேதிக்குள் வாக்காளர்கள் பூர்த்தி செய்து திரும்ப வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கணக்கீட்டு படிவம் உங்கள் வீட்டிற்கு பிஎல்ஓவிடம் இருந்து வந்து சேரவில்லை, நீங்கள் சொந்த ஊரில் இல்லை என்பது போன்ற வேளையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதியை தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதற்கு வாக்காளர் ஒருவர் https://voters.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மாநிலம், தொகுதி, பாகம் எண், வரிசை எண் போன்றவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இரண்டிலும் பெயர் ஒத்துப்போக வேண்டும். பெயர் குழப்பம் வரும் என்றால் தொடக்கத்திலேயே தவிர்த்து உங்களது பிஎல்ஒவை அணுகி கணக்கீட்டு படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
* இதில் ‘இந்தியன் ரெசிடென்ட்’ ஆப்ஷனை தேர்வு செய்து லாகின் செய்து ‘பல் எனுமரேஷன் பார்ம்’ உள் சென்று மீண்டும் ஒருமுறை உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுத்து ‘செர்ச்’ செய்து கொள்ளுங்கள். இதற்கு உங்கள் செல்போன் எண் தேவைப்படும். ஒடிபி வெரிபிகேஷன் செய்ய வேண்டும்.
* அடுத்து 3 ஆப்ஷன்கள் உள்ளது. எஸ்ஐஆர் 2002 அல்லது எஸ்ஐஆர் 2005 பட்டியலில் 1. உங்கள் பெயர் இருந்தால், 2. உங்கள் பெயர் இல்லை ஆனால் உங்கள் பெற்றோர் பெயர் இருந்தால், 3. உங்கள் பெயரோ அல்லது உங்கள் பெற்றோர் பெயரோ இல்லை என்றால் என இருக்கும். இதில் எந்த ஆப்ஷன் உங்களுக்கு பொருந்துமோ அதை டிக் செய்து கொள்ளள வேண்டும்.
* ஆப்ஷன்-1ல் இதில் உங்கள் மாநிலம், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் கொடுக்க வேண்டும். அதன் பின் உங்கள் பிறந்த தேதி, உங்கள் தந்தை, தாயர் பெயர் கொடுத்தால் போதும். புகைப்படம் மாற்ற விரும்பினால் சமீபத்திய புகைப்படத்தை அப்லோடு செய்து சப்மிட் செய்தால் போதுமானது. 2002 வாக்காளர் பட்டியல் தொகுதி, பாகம் எண், வரிசை எண் கொடுத்தால் பிற விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
* ஆப்ஷன்-2 இதில் உங்கள் பெற்றோர் ஒருவர் மாநிலம்/ சட்டமன்ற தொகுதி/ பாகம் எண்/ வரிசை எண் கொடுக்க வேண்டும். உங்கள் பிறந்த தேதி, உங்கள் தந்தை, தாய் பெயர் இந்த 3 தகவல் கொடுத்தால் போதும். புகைப்படம் மாற்ற விரும்பினால் சமீபத்திய புகைப்படத்தை அப்லோடு செய்து சப்மிட் செய்தால் போதுமானது.
* ஆப்ஷன்-3 தேர்வு செய்திருந்தால் நேரடியாக உங்கள் பிறந்த தேதி, உங்கள் தந்தை, தாய் பெயர் இந்த 3 தகவல் கொடுத்தால் போதும். கூடுதலாக உங்கள் பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டை எண் (விரும்பினால்) கொடுத்தால் நல்லது. புகைப்படம் மாற்ற விரும்பினால் சமீபத்திய புகைப்படத்தை அப்லோடு செய்து சப்மிட் செய்தால் போதுமானது.
* வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் ஒத்துப்போக வேண்டும். ஒடிபி வெரிபிகேஷன் உண்டு. ஆதார் எண் விரும்பினால் கொடுத்தால் போதும். ஆதார் எண் கொடுக்காவிட்டால் பெயர் பிரச்னை இன்றி விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்.
* டிசம்பர் 9ம் தேதிக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இல்லை எனில் ஆவணங்கள் கொடுக்க வேண்டி வரும்.
* வெளிநாட்டில் வசிப்பவர் எனில் உங்களுக்கான வெரிபிகேஷன் இ-மெயில் மூலம் இருக்கும், இதர அனைத்து ஆப்ஷன்கள் அனைவருக்கும் பொதுவானது. சந்தேகம் இருந்தால் உங்கள் பிஎல்ஒவை தொடர்புகொள்ளலாம்.
* உங்களது வாக்காளர் அட்டை எண்ணை கொடுத்து செர்ச் செய்யும்போது அதில் ஆதார் வெரிபிகேஷன் தொடர்பான அறிவிப்பும், நீங்கள் விரும்பவில்லையெனில் ஆப்லைனில் உங்கள் பிஎல்ஒ விடம் விண்ணப்பிக்கலாம் என பிஎல்ஒ பெயர்,தொலைபேசி எண் விபரம் அதில் தெரிவிக்கப்படும்.
கலெக்டர் அலுவலகம், உள்ளாட்சி அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையங்கள்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும், 2002ம் ஆண்டு வாக்காளரின் பெயர் இருக்கும் தொகுதி, பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளவும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு நேரில் சென்று விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவையெனில் இலவச வாக்காளர் உதவி எண் 04652 -1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
