போதைப்பொருள் கும்பலை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 119 பேர் பலி: பிரேசிலில் போலீசை கண்டித்து பொதுமக்கள் பேரணி

 

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் சி40 உலக மேயர்கள் உச்சி மாநாடு மற்றும் ஏர்த்ஷாட் பரிசு வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு “ரெட் கமாண்ட்” என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக நேற்று முன்தினம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 2,500 போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் கும்பல் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு ஆபரேஷனில் 4 போலீசார் உட்பட 119 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் சந்தேகிக்கப்படும்படியான 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்த கோரியுள்ளன. மேலும், 119 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு, போலீசாரின் மிருகத்தனமான நடவடிக்கைகளை கண்டித்து பொதுமக்கள் பிரமாண்டமான பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: