புதுடெல்லி: பண்டிகைகளை முன்னிட்டு பீகாரில் ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதற்கு ஒன்றிய அரசை ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இது இந்துக்களின் பண்டிகை மாதமாகும். பாய் துஜ், சாத் உள்ளிட்ட பண்டிகைகள் காலமாகும். பீகாரில் இந்த பண்டிகைகள் நம்பிக்கையை காட்டிலும் அதிக சிறப்புடையவையாகும். இதற்காக வெளியூர்களில் இருப்பவர்கள் வீடு திரும்புவது வழக்கமாகும். மண் வாசனை, குடும்பத்தின் பாசம், கிராமத்தின் அரவணைப்பு என வீடு திரும்புவது என்பது ஏக்கமாகும். இந்த ஏக்கமானது தற்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது. பீகார் செல்லும் ரயில்கள் நிரம்பியுள்ளன.
டிக்கெட்டுக்கள் கிடைப்பது சாத்தியமில்லை. ரயில் பயணம் மனிதாபிமானமற்றதாகிவிட்டது. பல ரயில்கள் 200 சதவீதம் அதிக சுமையுடன் செல்கின்றன. மக்கள் ரயில்களின் கதவுகளிலும் கூரைகளிலும் தொங்கி கொண்டு இருக்கிறார்கள். இது தோல்வியடைந்த இரட்டை எஞ்சின் அரசின் கூற்றுக்கள் வெற்றுத்தனமாக உள்ளதை காட்டுகின்றது. 12000 சிறப்பு ரயில்கள் எங்கே? ஒவ்வொரு ஆண்டும் நிலைமை ஏன் மோசமடைகின்றது. பீகார் மக்கள் ஏன் ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு மோசமான சூழ்நிலையில் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மாநிலத்தில் வேலை வாய்ப்பும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைத்தால் அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அலைய வேண்டியதில்லை. இவர்கள் உதவியற்ற பயணிகள் மட்டுமல்ல. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஏமாற்று கொள்கைகள் மற்றும் நோக்கங்களின் உயிருள்ள சான்றுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
