குடியாத்தம், அக்.25: மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் கவுண்டன்யா மகாநதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர- தமிழக எல்லையோரம் அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். ஆந்திரா வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கவுண்டன்யா மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், நேற்று அணைக்கட்டு எம்எல்ஏவும், சட்டமன்ற பொது நிறுவனங்கள் ஆய்வுக்குழு தலைவருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். அப்போது, நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் பிரதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லுர்பேட்டை ஏரியை தூர்வாரி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுவே எனது தேர்தல் வாக்குறுதி. 2026ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றார்.
