கரூர்: கரூர் துயர சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் பேசுகிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான இடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ளவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்த மகேஸ்வரி (43) இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி, ‘‘கமல் பண்பாட்டு மையம்’’ சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் கமல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஊடகங்கள் வாயிலாக பல உண்மைகள் இன்று வெளிவந்துள்ளது. இது யாரையும் பாராட்டுவதற்கான நேரம் இல்லை. செந்தில் பாலாஜி உடனடியாக வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அவருடைய சொந்த ஊர், அவர் எப்படி உடனடியாக வந்தார் என்று கேள்வி எழுப்புவது தவறு. அரசும், முதல்வரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது போன்ற கூட்டங்களை ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்த வேண்டும். தவெக சார்பில் முன்னதாக அனுமதி கேட்கப்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் ஆற்றில் மக்கள் விழுந்திருந்தால், இதை விட அதிக உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
நான் பேசுவது மனிதம். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் அரசியல் பேசுவது தவறு. இது யாரையும் குற்றம் சொல்வதற்கான நேரமில்லை. இதில் நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. காலம் கடந்து அறிவுரை சொல்வதில் அர்த்தம் இல்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டுள்ளது. நாம் விசாரிப்பதை விட எஸ்ஐடி குழுவின் விசாரணை ஆழமாகவும், உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
