அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு: தொடரும் இழுபறி; நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்

 

சென்னை: அதிமுக-பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனாலும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிமுக – பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 12 நாட்களே உள்ளதால், அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கூட்டணி குறித்து அதிமுக – பாஜக இடையே இரண்டு, மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் கூட்டணிகளுக்கு எத்தனை தொகுதி என்று முடிவு எட்டப்படவில்லை. இதனால், இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுக 27 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த நிலையில் பாஜக 30 தொகுதிகளை கேட்டு நிர்பந்தம் செய்து வருகிறது. பாஜகவுக்கு அதிமுக 29 தொகுதிகளை ஒதுக்கி உடன்பாடு எட்டப்படும் என என்.டி.ஏ. வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இழுபறி நீடிக்கும் நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். வெள்ளிக்கிழமை இரவுக்குள் அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: