கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்பதற்காக, முதல்வரை நேரில் சந்தித்து, எங்களது ஆதரவை தெரிவித்தோம். பாஜவின் இலக்கு அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான். அதனை எடப்பாடி பழனிசாமியை கொண்டு செயல்படுத்தி விட்டார்கள். ஜெயலலிதா இருந்தபோது, பாஜவினர் போயஸ் கார்டன் வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் யாராவது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளார்களா? முதல்வர் யார் என்பதை பாஜதான் முடிவு செய்யும். எடப்பாடி பழனிசாமி, என்னை எவ்வளவுதான் அழைத்தாலும், செல்ல மாட்டேன். அவரை போன்ற ஒரு துரோகியை அரசியலில் யாரும் பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர். நயன்தாரா பற்றி சி.வி.சண்முகம் பேசியது கேவலமான அரசியல். இது போன்ற ஆட்களை வைத்து கொண்டுதான் எடப்பாடி அரசியல் செய்கிறார். இனி அங்கே இருப்பவர்களும் ஒவ்வொரு நடிகைகளாக கேட்பார்கள் போல? சசிகலா ஆரம்பித்துள்ள கட்சி, அவருடைய சொந்த கட்சி அல்ல.
அவர் யாரிடமோ இருந்து கட்சியை வாடகைக்கு வாங்கி இருக்கலாம். டிடிவி தினகரன் மீது உள்ள கோபத்தினால் அவர் அவ்வாறு செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல மு.க.ஸ்டாலினும் 10 வருடம் முதலமைச்சராக தொடர்வார். எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் பிரிந்து இருந்தார்கள். தற்போது டிடிவி தினகரன், கூட்டணியில் சேர்ந்தவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு நல்லவர் ஆகிவிட்டாரா?. டிடிவி தினகரனுக்கு 300 வாக்குகள் கூட வராது. தென்தமிழகமாக இருந்தாலும் சரி, முழு தமிழகமாக இருந்தாலும் சரி எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அதிமுகவிற்கு ஒரு சீட்டு கூட வராது, அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியாக தான் இருப்பார்.
