அதிமுக – பாஜ தொகுதி உடன்பாடு ஏற்படுமா? பியூஷ்கோயல் இன்று சென்னை வருகை: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகிறார்

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜ தலைவர் பியூஷ்கோயல் இன்று சென்னை வருகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. அதற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனாலும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிமுக – பாஜ இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால், இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ்கோயல் இன்று சென்னை வருகிறார். சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ்கோயல் சந்தித்து பேசுகிறார். அப்போது, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் செல்கிறார்கள். இந்த சந்திப்பின்போது, அதிமுக – பாஜ தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசப்பட உள்ளது. பாஜ மூத்த தலைவர் அமித்ஷா, ஏற்கனவே எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார். அப்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ எத்தனை இடங்களில் போட்டியிடும், என்னென்ன தொகுதிகளில் போட்டியிடும் என்ற பட்டியலை அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்படுகிறது.

அதிமுக – பாஜ தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் கூட்டணி கட்சிகளான பாமக, தமாகா உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு தொகுதி மற்றும் சீட் வழங்கப்படும். மேலும், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார். அதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் பாஜ, அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

Related Stories: