பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மட்டம் வீக்…. டெல்டாவில் 25 தொகுதிகளை கூட்டணி கட்சிகள் தலையில் கட்ட அதிமுக திட்டம்: கடும் அதிருப்தியில் அன்புமணி, தினகரன்

 

திருச்சி: தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயிக்கும் முக்கியமான பகுதியாக காவிரி டெல்டா பகுதிகள் விளங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் 9, கரூர்-4, புதுக்கோட்டை-6, அரியலுார்-2, பெரம்பலூர்-2, தஞ்சாவூர்-8, திருவாரூர்-4, மயிலாடுதுறை-3, நாகப்பட்டினம்-3 என மத்திய மண்டலத்தின் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 38 தொகுதிகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றின. டெல்டா மாவட்டங்கள் எப்போதுமே திமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது.

எனவே இந்த முறை டெல்டாவில் அதிமுக பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், 25 தொகுதிகளுக்கு மேல் கூட்டணி கட்சிகளின் தலையில் கட்ட அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘‘டெல்டா பகுதி விவசாயம், நீர்வள அரசியல் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றை மையமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு திமுக கூட்டணிக்கு எப்போதுமே சாதகமாகவே இருந்து வருகிறது. அதிமுக வீக்காகவே உள்ளது. கடந்த 2021 தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காமராஜ், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 3 பேருமே முன்னாள் அமைச்சர்கள்.

தற்போது கள நிலவரப்படி 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வீக்காக உள்ளது. எனவே தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். 25 தொகுதிகளுக்கு மேல் கூட்டணி கட்சிகள் தலையில் கட்டி விடலாம் என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜவை பொறுத்தவரை டெல்டாவில் அடித்தளம் அவ்வளவாக இல்லை. இதனால் டெல்டாவில் சீட் பெற அதிக ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரனின் சொந்த ஊர் டெல்டாவாகும்.

இதனால் அன்புமணி, தினகரனுக்கு அதிகளவில் தொகுதிகளை தள்ளி விடலாம் என எடப்பாடி கணக்கு போடுகிறாராம். இதேபோல் மற்ற சிறிய கட்சிகளில் சிலவற்றுக்கும் டெல்டாவில் சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளாராம். இதை கேள்விப்பட்டு அன்புமணியும், தினகரனும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதை ஏற்க கூடாது என்று இருவருமே முடிவு செய்துள்ளனராம். எனவே இந்த விவகாரம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்றனர்.

Related Stories: