மாநிலங்களவை செயலக செயல்பாடு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு

புதுடெல்லி: துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். கடந்த செப்டம்பர் 9 ம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து 12ம் தேதி மாநிலங்களவைத் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், மாநிலங்களவை செயலகத்தின் செயல்பாடுகள் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை செயலகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது மாநிலங்களவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவை செயலகம் அளிக்கும் நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பு குறித்த விவரங்களை சி.பி.ராதாகிருஷ்ணனிடம் அதிகாரிகள் விளக்கினர் என்று மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது. புதிய துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநிலங்களவை தலைவர் நடத்துவது வழக்கம்.இந்தமுறை கூட்டத்தொடருக்கு முன்பாகவே புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். வரும் நவம்பரில் பீகார் சட்ட பேரவை தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: