சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30ம் தேதி ஆரூத்ரா தரிசன விழா ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: 29ம் தேதி தேரோட்டம்

சிதம்பரம், டிச. 22: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 30ம் தேதி ஆரூத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.  உலகப் பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடியேற்றி வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து

கொண்டனர்.

 நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் 30ம் தேதி காலையில் மகாபிஷேகம், அதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும். மார்கழி ஆரூத்ரா தரிசனம் நடைபெறும் நேரத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேரோட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் என்றும், இன்னும் சில தினங்களில் கடலூர் மாவட்ட நிர்வாகம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரிகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன்படி கோயில் திருவிழா நடைபெறும் என நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

Related Stories: