புவனேஸ்வர்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் பட்நாயக்குடன் மீண்டும் வி.கே. பாண்டியன் இணைந்தார். 2024 தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் அவர் தோன்றினார். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரிய ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே. பாண்டியன் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜூஜனதா தளம் கட்சியில் இணைந்தார். 2024 சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் வி.கே. பாண்டியன் தலைமையில் தான் நடந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த தேர்தலில் பா.ஜ வென்று ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து வி.கே. பாண்டியன் அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டு, பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்தார். அவரது மனைவி சுஜாதா ஐஏஎஸ்சும் ஒடிசா அரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால் வி.கே. பாண்டியன் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நவீன்பட்நாயக் கடந்த ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவருடன் வி.கே.பாண்டியன் 2024ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார். நவீன்பட்நாயக்குடன் கைகோர்த்து அவரை பாதுகாப்பாக மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தார். இதன் மூலம் அவர் மீண்டும் பிஜூஜனதா தளம் கட்சியில் முக்கிய பொறுப்பில் செயல்படப்போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
