தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்பு தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கேட்பு

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தியின் 138ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பாஜவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி பிரசாரம் முன்னெடுத்துள்ள நிலையில், வாக்கு திருட்டு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகனங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டும் ‘ஸ்டிக்கரை’ கிரிஷ் சோடங்கர் வெளியிட செல்வப்பெருந்தகை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, தமிழ காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்துஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு பிரிவுகளின் தலைவர்களும் தேர்தல் பணிகள், பிரசார வியூகங்கள், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், அதிக வாக்குகளை பெற என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை காரசாரமாக தெரிவித்தனர். சிலர் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசினர். தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் மட்டும் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் விவகாரங்கள் குறித்து மட்டும் பிரிவுகளின் தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. கூட்டத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வாக்கு திருட்டு யாத்திரைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தாலும், தொடர்ந்து 3வது நாளாக பேரணியில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் இதற்கு பதில் அளிக்க முடியாமல் பாஜ திணறிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தமிழகத்துக்கான நிதியை புறக்கணித்து தமிழக மக்களை வஞ்சிக்கின்றனர்’’ என்றார்.

* திடீர் பேரணியால் பரபரப்பு
பாஜவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி தலைமையில், எஸ்.சி.துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் முன்னிலையில் ஏராளமான காங்கிரசார் திருவிக சாலையில் திடீர் பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

* ‘வாக்கு திருட்டு குறித்து மாநிலம் தழுவிய மாநாடு’
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையின் மாநில செயற்குழு கூட்டம், சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மனித உரிமை துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஒருவரின் வாக்குரிமை பறிக்கப்படும் போது மனித உரிமை மறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அங்கு நாம் நிற்க வேண்டும். ஒன்றிய பாஜ அரசு, தேர்தல் ஆணையம் வாயிலாக நடத்தி உள்ள வாக்கு திருட்டு குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மனித உரிமை துறை சார்பில் மனித சங்கிலி போராட்டம், வீடு வீடாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் வாக்கு திருட்டு குறித்து விரைவில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த போகிறோம். இந்த போராட்டங்களின் மூலம் பாஜ பாசிச சக்திகளை விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: