துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கும், தமிழுக்கும் கிடைத்த மிகப் பெரிய பெருமை. அவர் மிகுந்த மரியாதைக்குரிய அரசியல் தலைவர். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கக் கூடியவர். மிகுந்த அனுபவம் மிக்க அரசியல் தலைவர். தான் வகித்த அனைத்து துறைகளிலும் பாஜ மாநில தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் வாரிய தலைவர், ஆளுநர் ஆகிய பதவிகளில் தனி முத்திரை பதித்தவர். இவரது பணி மிகவும் சிறப்பானதாகவும், நேர்மையானதாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரை ஆதரிக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மராட்டிய மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். பாஜவின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டோரின் நம்பிக்கையைப் பெற்றவர். பொதுவாழ்க்கையில் எந்த காலத்திலும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவையை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு. இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்: இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், தமிழக பாஜ வளர்ச்சிக்காக பாடுபட்டவர். சிபிஆர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். தமிழர்கள் மீதான அன்பை, இத்தகைய செயல் மீண்டும் பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். இது, தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

Related Stories: