பிரதமருக்கு எதிராக போராடிய விவசாயிகள் சங்கத்தினர் மீது பாஜவினர் பயங்கர தாக்குதல்: மாவட்ட நிர்வாகி படுகாயம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும், வெளியுறவுத்துறை செயல்பாடுகளில் சரியாக செயல்படாததாக, பிரதமர் மோடியையும் கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று போராட்டம் நடந்தது. திருமங்கலம் தேவர் சிலை அருகே நடந்த போராட்டத்திற்கு பொதுச்செயலாளர் சந்தானம் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அவர்களது உருவப்படங்களை தீயிட்டும் கொளுத்தினர். அப்போது அங்கு பாஜ மகளிர் அணி நிர்வாகி மலைச்செல்வி தலைமையில் வந்தவர்கள், பிரதமர் மோடி உருவ படத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திடீரென தாக்கத் துவங்கினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது. இதில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிராமலிங்கம் படுகாயமடைந்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய பாஜவினரை கைது செய்யக்கோரி, விவசாய அமைப்பினர் திருமங்கலம் – விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: