ஆக்கிரமித்து கட்டப்பட்ட மண்டபம் இடித்து அகற்றம்

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி அருகில், திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மண்டபம் கட்டும் பகுதியில் இருந்த சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கு தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, மண்டபம் கட்டப்பட்டு உள்ளதாக, கடந்த மாதம் அப்பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர், பிரச்னைக்குரிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சுடுகாடு இருந்த நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய் துறையினர், போலீசார் பாதுகாப்போடு, அப்பகுதிக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories: