ராயக்கோட்டை, டிச.12: ராயக்கோட்டை பகுதியில், பட்டன் ரோஸ் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் தக்காளி மற்றும் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக பூக்கள் சாகுபடியில், விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறிகள் விலையேற்றத்தாலும், சுப நிகழ்ச்சிகள் இல்லாத நிலையிலும், பூக்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது. இதனால், பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக, அதிக அளவில் பூந்தோட்டங்களை விவசாயிகள் உருவாக்கி வருகின்றனர். அதிகளவிலான பரப்பில் சாமந்திப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்டன் ரோஜா தோட்டம் அமைப்பதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். சாமந்தி பூக்கள் விலை கிலோ ரூ.80க்கு குறையாமல் உள்ளது. அதே போல், மீராபால் என்னும் பட்டன் ரோஸ் கிலோ ரூ.120க்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பட்டன் ரோஸ் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக நிலத்தை தயார் படுத்தி சொட்டுநீர் குழாய் பதித்து, மூடாக் என்னும் மல்ச்சிங் ஷீட் போர்த்தி அதில் துளையிட்டு, பட்டன் ரோஜா செடிகளை நடுகின்றனர். ஒரு பட்டன் ரோஜா செடியை ரூ.24க்கு வாங்கி வந்து நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
