கடும் குளிரால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

ஓசூர், டிச.22: ஓசூர் மாநகராட்சி பகுதிகளில், கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். காலை 10 மணிக்கு தான் வெளியே வரும் அளவிற்கு பனிமூட்டம் மற்றும் குளிர் நிலவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஓசூர் பகுதியில் கடும் குளிர் நிலவும். இந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக, குளிரின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. ஓசூரில் நேற்று காலை, குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பகலில் சராசரி வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், மதிய நேரத்தில் 23 டிகிரியாகவும் பதிவாகி உள்ளது. அதிகாலையில் 95 சதவீதம் காற்றில் அதிகபட்ச ஈரப்பதம் இருந்தது. இதனால், முதியவர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

காலையில் நடைபயிற்சி செய்பவர்கள் ஜெர்க்கின், குல்லா அணிந்தபடி சென்றனர். குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர்களை அணிந்திருந்தனர். ஓசூரில், வழக்கத்தை விட சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஓசூர் மாநகராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், கடந்த சில நாட்களாக காலை 9 மணி ஆனாலும், குளிர் விட்டு போகமால் மக்களை நடுங்க வைக்கிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர். அதில் ஜெர்க்கின் மற்றும் ஹெல்மெட் அணிந்துபடி செல்வதை காணமுடிகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகளால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகாலையில் விளைபொருட்களை சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், குளிரால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வாகன ஓட்டிகள் குளிரின் தாக்கம் தாங்க முடியாமல், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு, நெருப்பு மூட்டி குளிர்
காய்கிறார்கள்.

Related Stories: