ஊட்டியில் ஆமை வேகத்தில் நடக்கும் நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டும் பணி

*வியாபாரிகள் ஏமாற்றம்

ஊட்டி : ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த இந்த மார்க்கெட்டில், சுமார் 1700க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.

இவைகளில் பெரும்பாலான கடைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை, இதனால், இந்த மார்க்கெட்டை மேம்படுத்துவதுடன், பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கியது.

முதற்கட்டமாக காபி அவுஸ் பகுதிக்கு அருகே உள்ள பன்றி இறைச்சி கடைகள் முதல் எலக்ட்ாிக்கல் கடை வரை 190 பழுதடைந்த கடைகள் இடித்து விட்டு தரைத்தளத்தில் 126 நான்கு சக்கர வாகனங்கள், 163 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் தளமும், முதல் தளத்தில் 240 கடைகள் கட்ட திட்டமிட்டு பணிகைளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய கடைகள் கட்டுமான பணிகள் கடந்த ஒன்றறை ஆண்டிற்கு முன் துவக்கப்பட்டது. இங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக கடைகள் ஏடிசி., பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்டது. ஓராண்டிற்குள் புதிய கடைகள் கட்டப்பட்டு மீண்டும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாத்தளவிற்கு கட்டுமான பணிகள் வேகமாக நடப்பதில்லை. மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடக்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 தொழிலாளர்கள் கூட இங்கு பணியாற்றுவதில்லை. கட்டுமான பணிகள் 50 சதவீதம் கூட இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. மிகவும் மந்தமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது தான் ஓரிரு தொழிாலளர்கள் இங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், இன்னும் மூன்று ஆண்டுகள் ஆனால், கூட இந்த நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவு பெறாது.

இதனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: