ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன? ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய தகவல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்குமாறு ஒன்றிய தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் என்ன?, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்க என்ன?, பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க மொபைல் ஆப், இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதா?, பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன போன்ற கேள்விகளை எழுப்பி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரினேன். அதில், இரு கேள்விகளுக்கு மட்டும் தேர்தல் ஆணைய பொது தகவல் அதிகாரி பதிலளித்தார்.

ஒன்றிய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்த போதும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து தகவல் அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது மத்திய தகவல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் இந்த வழக்கை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

Related Stories: