கோவில்பட்டி: வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் வந்த நெல்லை கோட்ட பாஜ நிர்வாகியை போலீசார் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று காலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 11.30 மணிக்கு வந்தே பாரத் ரயில் வந்து நின்றது. ரயிலில் இருந்த இறங்கிய நபர் கையில் சூட்கேசுடன் வந்தார்.
சந்தேகமடைந்த போலீசார் அவரது சூட்கேஸை சோதனையிட்ட போது, அதில் ரூ.10.50 லட்சம் பணம் இருந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் நெல்லை கோட்ட பாஜ தேர்தல் பணி பொறுப்பாளர் நீலம் முரளி யாதவ் என்பது தெரியவந்தது. அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலி கோட்ட பாஜ தேர்தல் பணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கோவில்பட்டி நகர முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவரை பின் தொடர்ந்தனர். போலீசார் அவரை சாத்தூர், சிவகாசி என அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு நீலம் முரளி யாதவை கொண்டு வந்தனர். தகவல் அறிந்து, பாஜவினர் காவல் நிலையம் முன்பு திரண்டு, நீலம் முரளி யாதவை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இது கட்சி பணம், அதனை நெல்லைக்கு எடுத்துச் செல்கிறேன். இது எஸ்ஐஆர் பயிற்சி பட்டறைக்கான ஏற்பாட்டு செலவு மற்றும் மண்டபங்கள் வாடகை தொகைக்கானது என நீலம் முரளி யாதவ் தெரிவித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் போலீசாரிடம் வழங்கினார். அதன்பிறகே போலீசார் வருவாய்த்துறையினர் முன்னிலையில் ரூ.10.50 லட்சம் பணத்தை நீலம் முரளி யாதவ்விடம் ஒப்படைத்தனர். அத்துடன் அவரையும் மாலை 4.30 மணியளவில் விடுவித்தனர்.
