சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் குறைவால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் கட்டணம் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, நேற்று 8வது நாளாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று அதிகாலையில் இருந்து, நள்ளிரவு வரையில் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 18, வருகை விமானங்கள் 23, என மொத்தம் 41 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், புவனேஸ்வர், பாட்னா, ஜெய்ப்பூர், கோவை, மற்றும் சர்வதேச விமானங்களான சிங்கப்பூர், பினாங்கு உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் வருகின்ற 10ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரையில், படிப்படியாக விமானங்கள் ரத்து எண்ணிக்கை குறைந்து, 15ம் தேதியில் இருந்து வழக்கமான நிலைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் கடந்த சில தினங்களாக பெருமளவு ரத்தாகி கொண்டு இருந்ததால், விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்து பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில், விமான போக்குவரத்து துறையின் இயக்குனரகம், விமான கட்டணங்கள் உயர்த்துவதற்கு உச்சவரம்பு நிர்ணயித்தது.

இதை அடுத்து விமான கட்டணங்கள் உயர்வு வெகுவாக குறைந்து விட்டது. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் செல்லும் விமான கட்டணங்கள், வழக்கமான நாட்களில் உள்ளது போல் மிகக் குறைவாக உள்ளது. சென்னை- மதுரை இடையே நேற்று, ரூ.4608 முதல் ரூ.5,224 வரையும், சென்னை- திருச்சி கட்டணம் ரூ.4,328, சென்னை-கோவை ரூ.4,887, சென்னை- தூத்துக்குடி ரூ.5,864 முதல் ரூ.6,934 வரை, சென்னை – சேலம் ரூ.3,299. சென்னை விமான நிலையத்தில், கடந்த சில நாட்களாக திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு ரூ.40 ஆயிரம், கோவை, தூத்துக்குடிக்கு ரூ.30,000 என்று கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணங்கள் வெகுவாக குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: