சென்னை: பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் நடத்தும் கபே டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் மற்றும் தேசிய பார்வையற்றோர் சங்கம் முன்முயற்சியால் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்கள் முழுமையாகப் பணியாற்றும் கபே, சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது டிசிஎஸ் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் மற்றும் நேஷனல் அசோசியேஷன் பார் தி பிளைண்ட் இயக்குநர் சாலினி கன்னா சோதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘பிளைண்ட் பேக் கபே’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கபே-வில் பேக்கரி, கபே மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பயிற்சி பெற்ற பார்வைத் திறன் குறைபாடு கொண்ட ஆறு செப்கள், நான்கு பார்வையுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு மேலாளர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இங்கு கேக்குகள், ஷேக்குகள், சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் இனிப்புகளைத் தயாரிக்கிறார்கள். பிரெய்ல் குறியீடு கொண்ட உபகரணங்கள், சரளமான அணுகலுக்கான தொடு உணர்வு திரை, மாற்று சமையல் முறைகளில் சிறப்புப் பயிற்சி உள்ளிட்ட கூறுகளை கணக்கில் கொண்டு இந்த கபே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை பிளைண்ட் கபேயைப் போலவே, இந்த சென்னை விற்பனை நிலையமும் பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு திறன் மேம்பாடு, தொழில்முறை பயிற்சி மற்றும் கண்ணியமான வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் பிளைண்ட் பேக் கபே தொடங்கப்பட்டது. இப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் உள்ளே முழுச்செயல்பாட்டு கடையாக வளர்ந்துள்ளது. இந்த பிளைண்ட் பேக் கபே மூலம் ஈட்டப்படும் அனைத்து வருமானங்களும் நேரடியாக பார்வைக் குறைபாடு கொண்ட ஊழியர்களுக்கும் பிளைண்ட் பேக் கபேயின் செயல்பாடுகளுக்கும் செல்கின்றன. இந்த நிதிகள் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் மேலும் பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு அவர்கள் சான்றிதழ் பெற்று தொழில்முறை செப்களாக வேலைவாய்ப்பு பெற உதவுகின்ற வகையில் பயிற்சி அளிக்க மறு முதலீடு செய்யப்படுகின்றன. இந்த பிளைண்ட் பேக் கபே மூலம் ஈட்டப்படும் அனைத்து வருமானங்களும் நேரடியாக பார்வைக் குறைபாடு கொண்ட ஊழியர்களுக்கும் பிளைண்ட் பேக் கபே செயல்பாடுகளுக்கும் செல்கின்றன.
