சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி. எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. எதிர்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்து தான் எடுக்கப்பட்டுள்ளன எனும் போது அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதி மொழியை ஆணையம் ஏன் கேட்கிறது? பீகாரில் இப்போது சிறப்பு தீவிர திருத்தம் என்னும் பெயரில் பெருமளவிலான நீக்கல்கள் ஏன் செய்யப்படுகின்றன. ராகுல் காந்தியும், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்பு காவிலில் வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம். வாக்குச் செலுத்திய வாக்காளர் பட்டியல்களை இயந்திரத்தால் வாசிக்க முடிகிற வடிவத்தில் வெளியிடுங்கள். அந்தப் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சகோதரர்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும், வெளிப்படைத் தன்மைக்காக ஒன்றுபடுமாறு அழைக்கிறேன். நமது ஜனநாயகத்தின் ரூபிகான் கோட்டை யாரும் தாண்ட நாம் அனுமதிக்க மாட்டோம். அது திருத்தவே முடியாத சீரழிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவே எழுக, சரியான பதில் வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்புக. அரசியலுக்காக அல்ல, நாட்டின் எதிர்காலத்துக்காக. இவ்வாறு எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
