ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கைது செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் காங்கிரசார் சாலை மறியல்: மோடி படத்தை எரித்ததால் பரபரப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் முறைகேடான வாக்காளர் பட்டியலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் நேற்று பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து மவுண்ட் ரோடு சந்திப்பு வரை பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் திடீரென சாலையின் நடுவே அமர்ந்து கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் முத்தழகன், டில்லி பாபு, பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், எஸ்.எம்.குமார், அகரம் கோபி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பிரதமர் மோடி படத்தையும் எரித்தனர். செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ”தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் தரவுகளை அழிக்கிறீர்கள். மாட்டிக் கொண்டார்கள்‌‌. இதிலிருந்து தப்புவது கடினம்” என்றார். வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில், வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: