சென்னை: கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்ட மதிமுகவினர் சேப்பாக்கம் மைதானத்திலிருந்து அமைதி ஊர்வலமாக சென்று கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, பாஜ இந்த திராவிட பூமியில் கால் பதிக்க முனைகிறார்கள். அவர்களை ஒரு காலமும் உள்ளே நுழைக்க அனுமதிக்க மாட்டோம். அவைகளை நுழைய விடக்கூடாது என்ற எண்ணத்தில் நுண்ணளவு மாற்றம் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். மதிமுக நிர்வாகிகள், துரை வைகோ மதிமுகவுக்குள் வர வேண்டும் என்றனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை.
ரகசிய வாக்கு எடுப்பு நடத்த கூறினர். அதை ஏற்று, வாக்குச்சாவடி அமைத்து 106 நிர்வாக குழு உறுப்பினர்கள் வாக்களித்னர். அதில் 104 பேர் துரை வைகோ கட்சிக்குள் வரவேண்டும் என வாக்களித்தனர். களப்பணியாற்றிய பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் துரை வைகோ சிறப்பாக பணியாற்றுகிறார் என வடமாநில தலைவர்களும் பிற கட்சியை சேர்ந்தவர்களும் பாராட்டுகிறார்கள். கொள்கைக்காக, லட்சியத்திற்காக ஒரே நிமிடத்தில் கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து திமுகவுடன் கூட்டணி வைத்த அந்த நாள் முதல் திமுகவுக்கு பேச்சில், எழுத்தில் களங்கம் விளைவிக்காமல் மு.க.ஸ்டாலினுக்கு பக்க பலமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
