6 பெண் குழந்தைகள் விற்பனை விவகாரம் அரசு பெண் டாக்டர் சஸ்பெண்ட்: போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் 6 பெண் குழந்தை விற்பனை வழக்கில் சிக்கிய மருத்துவர், ஏற்கனவே ஆண் குழந்தையை ரூ.3லட்சத்திற்கு விற்பனை செய்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 6 பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பாக, லோகாம்பாள்(38) என்பவரை கைது செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் அனுராதா(39) என்பவரின் தூண்டுதலின் பேரில், தினேஷிடம் குழந்தையை விற்க வலியுறுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, டாக்டர் அனுராதாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, நேற்று காலை நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், டாக்டர் அனுராதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கைதான டாக்டர் அனுராதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணி புரிகிறேன். எனது கணவர் அர்ஜூனன் வியாபாரம் செய்து வருகிறார். எங்களுக்கு 2 மகள்கள். திருச்செங்கோடு -நாமக்கல் ரோட்டில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறேன். நாலுகால் மண்டபம் அருகில் ஒரு மருத்துவமனையின் ஒரு பகுதியை, மாத வாடகைக்கு எடுத்து மருத்துவம் பார்த்து வருகிறேன். இந்த கிளினிக்கில் என்னிடம் வேலைக்கு சேர்ந்த சாணார்பாளையத்தை சேர்ந்த லோகாம்பாள், குழந்தையை வளர்க்க முடியாதவர்களிடம், வாங்கி இல்லாதவர்களுக்கு விற்பேன்.

இதன்மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. நீங்களும் குழந்தைகள் இருந்தால் சொல்லுங்கள், விற்றுத்தருகிறேன் என்றார். இந்த நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழும் தனலட்சுமி என்பவர், எனது கிளினிக்கிற்கு கருக்கலைப்புக்காக வந்தார். அவரிடம் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி, குழந்தை பிறந்த பின் அதை யாருக்கும் தெரியாமல் விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி, தனலட்சுமியிடம் குழந்தை பெற்றுக்கொள். அதை யாருக்காவது விற்று விடலாம் என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

கடந்த ஜூன் 1ம்தேதி மாலை, தனலட்சுமிக்கு எனது மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரிடம் குழந்தையை காட்டாமல், லோகாம்பாளிடம் குழந்தையை கொடுத்து விட்டேன். அவர் எனக்கு ரூ.3 லட்சம் கொடுத்தார். லோகாம்பாளுக்கு கமிஷனாக ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். ஒரே நாளில் ரூ.3 லட்சம் வந்ததும் எனக்கு ஆசை அதிகமாகிவிட்டது. அதன் பிறகு, தினேஷ் மனைவி நாகதேவிக்கு 3வதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனை எப்படியாவது பேசி விற்க ஏற்பாடு செய் என்று லோகாம்பாளிடம் கூறினேன். லோகாம்பாள், தினேஷிடம் பேசியதில் பிரச்னை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு டாக்டர் அனுராதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post 6 பெண் குழந்தைகள் விற்பனை விவகாரம் அரசு பெண் டாக்டர் சஸ்பெண்ட்: போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: