60 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

புழல், ஜூன் 27: சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால், மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் நடைப்பெறும் என, லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்க சாவடி உள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து செங்குன்றம் செல்லும் திசையில் சுங்கச்சாவடி சாலையின் மையப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதனால், யூ டர்னில் திரும்ப முடியாமல் சுங்கச்சாவடி வழியாக சென்று மீண்டும் சுங்கச்சாவடி வழியாக திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால், தேவையில்லாமல் சுங்ககட்டணத்தை செலுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நல்லூர், பன்னீர்வாக்கம், பார்த்தசாரதி நகர் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே சுங்க சாவடியில் அமைக்கப்பட்ட யூ டர்ன் பகுதியில் மீண்டும் வாகன ஓட்டுபவர்கள் மற்றும் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மூடப்பட்ட யூ டர்ன் திறக்க கோரி சென்னை மற்றும் புறநகர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். செங்குன்றம் சுற்று வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் காமராஜ், நல்லூர் கிருஷ்ணமூர்த்தி, கணேசன் முன்னிலை வகித்தனர்.

பின்னர், யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பஞ்சாப் மாநில முதல்வர் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடினார். நல்லூர் சுங்கச்சாவடி காலாவதியானதாகும். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு நல்லூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும். இந்த சுங்க சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கழிவறை, ஓய்வறை, பார்க்கிங், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் போதிய அளவு சுங்கச்சாவடி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. ஒன்றிய அமைச்சர் 60 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்றுவதாக கூறினார். அதையும் ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மேற்கண்ட பிரச்னைகளை முன்வைத்து தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடத்தப்படும்.’’ என தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சோழவரம் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post 60 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: