பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமும் ஒன்றாகும்.

அதேபோல், இந்த நீர்த்தேக்கத்தில் மீன்வளர்ப்பைஆதாரமாகக் கொண்டு 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் நீர்த்தேக்கப் பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தாலும், கடுமையான கோடை வெயில் காரணமாகவும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் தண்ணீர் குறைவால் நீர் வாழ் தாவரங்கள் வெப்பம் தாங்காமல் அழுகி நச்சுத்தன்மையாக மாறிவிடுதல் போன்ற காரணங்களாலும் மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்கள் குவியல், குவியல்களாக செத்து மிதந்தும், கரை ஒதுங்கியிருப்பதையும் காண முடிகிறது. அதோடு, அந்தப் பகுதி முழுவதும் உயிரிழந்த மீன்கள் அழுகி துர்நாற்றமும் வீசத் தொடங்கியதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்லக்கூடிய நிலையும் உள்ளது. எனவே உயிரிழந்த மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: