சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்

திருவள்ளூர்: ரூ.1 லட்சம் கட்டினால் ₹4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,930 பேரிடம் பணம் வசூலித்து ₹87 கோடி மோசடி செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களிடம் 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்ற பழமொழிக்கேற்ப திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மோசடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் பிரபல மோசடி நிதி நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ₹1 லட்சம் கட்டினால் ₹4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இதில் 2015 முதல் 2018 வரை வட்டி பணத்தை திருப்பி தந்துள்ளனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் ஸ்வர்ணதாரா நிறுவனத்திற்கு திருவள்ளூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன் (76) என்பவர் பிசினஸ் அசோசியேட்டாகவும், அவரது மனைவி வசந்தி, மகள் பவானி மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் புரோக்கர்களாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் திருவள்ளூர், பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஸ்வர்ணதாரா குரூப் ஆப் கம்பெனிக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட ₹87 கோடி வசூல் செய்துள்ளனர்.

2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் அறிவித்தபடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டிப் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பாண்டுரங்கனிடம் கேட்டபோது, நீங்கள் செலுத்திய பணத்தை ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தில் செலுத்தியதாகவும், அவர்கள் அந்த பணத்தை தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்வர்ணதாரா நிதி மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மே மாதம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடரங்க குப்தா, அவரது மனைவி கவிதா சக்தி, இயக்குனர்கள் ஹரிஹரன், விஜய குப்தா, அவர்களது மகள் பிரதீஷா குப்தா, ஜெய் சந்தோஷ், ஜெய் விக்னேஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் திருவள்ளூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கனை நம்பி கிட்டத்தட்ட 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் 1,930 நபர்களிடமிருந்து ₹87 கோடி வரை முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றியதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். ஸ்வர்ணதாரா நிதி குழுமத்தில் இந்த பணத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன் (76) மற்றும் அவரது மனைவி வசந்தி, மகள் பவானி, மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் செலுத்தினார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இவர்கள் இதில் கோடி கணக்கில் கமிஷன் பெற்றுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இந்த மோசடி சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: