தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அதிக ஊழல் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி

வேலூர், பிப்.25:தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அதிக அளவு ஊழல் நடக்கிறது என்று வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.வேலூரில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜ போராட்டம் நடத்துவதால் தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏன் என்றால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடந்துவிட்டது. அது அமைதியாக தான் சென்றது. அதேபோல் ஆதரித்து அவர்கள் போராடுகிறார்கள்.7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டமன்ற தீர்மானத்தை மட்டும் அவர்கள் (மத்திய அரசு வழக்கறிஞர்) ஜீரோ என்று சொல்லவில்லை. இந்த அமைச்சரவையையே ஜீரோ என்று தான் செல்வது போன்று அர்த்தம். வார்டு சீரமைப்பு பணிகள் தொடர்பாக ஒவ்வொரு ஒன்றிய செயலாளரிடமும் விளக்கம் கேட்டு அதிகாரிகளை சந்தித்து நிவர்த்தி செய்ய உள்ளோம்.

நாங்கள் திமுக ஆட்சியை விட்டுச் செல்லும்போது ஒரு லட்சம் கோடி கடன் இருந்தது. அப்போது எங்களை கடனாளியாக்கி விட்டீர்கள் என்று அதிமுகவினர் கூறினார்கள். ஆனால் தற்போது 4.50 லட்சம் கோடி கடன் வைத்துள்ளார்கள். எனவே இவ்வளவு கடனை நாங்கள் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் சமாளிப்பார்.ஏரிகள் தூர்வாரும் விவகாரத்தில் ஆளும் கட்சியினரை திருப்திபடுத்துவதற்காகவே பணிகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் அதிக அளவு ஊழல் நடக்கிறது. காரணம் மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் அவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். அப்போது எம்.பி.கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உடனிருந்தனர்.

Related Stories: