தண்டராம்பட்டு அருகே துரத்திச்சென்று பிடித்தனர் வீடுகளில் கைவரிசை காட்டிய இளம்பெண், பெயின்டர் கைது

தண்டராம்பட்டு, டிச.3: வீடுகளில் கைவரிசை காட்டிய பெயின்டர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் விரட்டி சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து 110 சவரன் நகை, பைக், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி செக்போஸ்ட் அருகே இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ருதின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் ஒரு பெண்ணும், ஆணும் வேகமாக சென்றனர். இதைப்பார்த்து, சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், பைக்கை ஓட்டிவந்தவர் நிறுத்தாமல் மேலும் வேகமாக சென்றார். இதையடுத்து, போலீசார் பைக்கில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர்.

இதைப்பார்த்த பைக் ஓட்டி வந்தவர் பைக்கை மலையனூர்செக்கடி கிராமம் அருகே நிறுத்திவிட்டு 2 பேரும் வயலில் இறங்கி தப்பி ஓடினர். அப்போது, அங்கு உழவுப்பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அவர்கள் ஓடி வருவதை பார்த்து 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசார் பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் தானிப்பாடி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பிடிபட்டவர்கள் தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த முருகன்(40) பெயின்டர் என்பதும், சேலம் மாவட்டம், பெரியகொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மைதிலி(36) என்பதும் தெரிய வந்தது. மேலும், செங்கத்தில் நகை திருட்டு வழக்கில் மைதிலி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையிலும், அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக முருகன் கைது செய்யப்பட்டு மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்பிறகு, இவர்கள் இருவரும் வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞரிடம் சென்று வருகையில் இருவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மைதிலி தான் திருடும் நகைகளை முருகன் வீட்டுக்கு எடுத்துவந்து அதன்பிறகு விற்பனை செய்வாராம். இவ்வாறு மைதிலி, முருகன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஆளில்லாத வீடுகள் மற்றும் மூதாட்டிகள் உள்ள வீடுகளாக பார்த்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, முருகன் அளித்த தகவலின்பேரில் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 சவரன் நகை மற்றும் ₹1,250யை பறிமுதல் செய்தனர். மைதிலி மீது மட்டும் 38 வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் மைதிலி ஆகியோரை கைது செய்து, செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: