பெரணமல்லூர் அருகே மழை வேண்டி சவ ஊர்வலம் எடுத்து நூதன வேண்டுதல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

பெரணமல்லூர், மே 15: பெரணமல்லூர் அருகே மழை வேண்டி பாடைகட்டி சவ ஊர்வலம் எடுத்து சென்று எரித்து நூதன வேண்டுதலில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் அடி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் வறட்சியை சமாளிக்க திண்டாடி வருகின்றனர். இதுதவிர குடிநீர் பிரச்னைகளுக்காக ஆங்காங்கே சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோயில்களில் மழை வேண்டி யாகமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மழை வேண்டி சவ ஊர்வலம் நடத்தி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர்.

முன்னதாக கிராமத்தில் நடுவே கொடும்பாவி காட்டி பாடை கட்டி மேள, தாளத்துடன் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதி வழியே எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள வறண்ட கல்ஏரிக்கு எடுத்து சென்றனர். பின்னர், அங்கு கொடும்பாவியை இறக்கி வைத்து சவத்திற்கு செய்யும் சடங்குகளை செய்து சுற்றி நின்று ஒப்பாரி வைத்து பெண்கள் அழுதனர். பின்னர், கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மழை பெய்தது. தற்போது மழை இல்லாததால் இப்பகுதிகளில் கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. மேலும், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் பயிர்கள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகி வருகிறது. எனவே, மழை வேண்டி குடிநீர் பிரச்னை தீர்த்து, விவசாயம் செழிக்க வருண பகவானை நினைத்து மனமுருகி ஒப்பாரி வைத்து கொடும்பாவியை எரித்து வழிபாடு நடத்தினோம்' என்றனர். தொடர்ந்து எரியில் படையலிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: