மானாமதுரை பகுதியில் கொடி கட்டிப்பறக்கும் கந்து வட்டி தொழில்

மானாமதுரை, மார்ச் 14: மானாமதுரையில் கந்து வட்டி தொழில் கொடிகட்டி பறக்கிறது. அசலை திரும்ப செலுத்த முடியாத அளவிற்கு வட்டி வசூலிப்பதால் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.சங்கமங்கலம், மாங்குளம், மேலப்பசலை, மஞ்சூர் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் கூலி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கீழமேல்குடி, பீசர்பட்டினம், கரிசல்குளம் பகுதிகளில் உள்ள விறகு கரிமூட்டம் போடும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என பலதரப்பட்ட ஏழை தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு உள்ளனர். இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். தாங்கள் செய்யும் வேலைக்கு வாரந்தோறும் கூலி வாங்கினாலும் குடும்பத்துடன் தங்கி வேலை செய்வதால் திடீர் என குடும்பத்தில் ஏற்படும் செலவீனங்களுக்கும், மழை காலங்கள், வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துக்களாலும் வேலை இல்லாமல் வருமானமின்றி இருக்கும் நாட்களில் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர்.

மானாமதுரையில் சிப்காட், தேவர் சிலை, அண்ணா சிலை, பழைய பஸ் ஸ்டாண்டு, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் ஏராளமான சிறு வணிகம் செய்யும் சிறுவியாபாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர பேரூராட்சி அருகில் உள்ள நடைபாதை வியாபாரிகள், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை சிறுவியாபாரிகள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் என அனைவருக்கும் தங்கள் தொழில் முதலீட்டுக்கும், தொழிலில் நஷ்டம் ஏற்படும்போதும், குடும்ப தேவைக்கும் வட்டிக்கு கடன் வாங்கித்தான் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது.அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வங்கிகளோ அடமானம் வைக்க பொருள்களோ ஜாமீன் தர உள்ளூர் வாசிகளோ தயாராக இல்லை.எனவே இவர்கள் கந்து வட்டி கும்பலிடம் தான் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. வட்டிக்கு விடும் கும்பலில் உள்ளூரை சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சில போலீசார் என சகலரும் உள்ளனர். ரன் வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் கும்பல்கள் ஏராளமாக உள்ளனர்.

கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கும் தொழிலாளி உழைப்பு முழுவதையும் வட்டிக்கு கட்டி விட்டு கடைசியில் ஊரை விட்டு ஓடும் நிலைமையும், குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்த குடும்பங்கள் ஏராளம். இது தொடர்பாக மானாமதுரையில் டிஎஸ்பியாக இருந்த வெள்ளத்துரையிடம் ஏராளமான புகார்கள் வந்தன. அவர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கந்துவட்டி கொடுமை குறைந்தன.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் இக்கொடுமை தலைதூக்கியுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரித்து, அடையாளம் கண்டு அவர்கள் மீது மாவட்ட எஸ்.பி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சியில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள், செங்கல் சேம்பர் காளவாசல் தொழிலாளர்கள், கொத்தனார்கள், சித்தாள்கள் என அடிதட்டு மக்களிடம் குறைந்த பணத்தை கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கில் வட்டி வசூலிக்கும் கும்பல் சில நேரங்களில் ஏடிஎம் கார்டுகளை பறித்து வைத்து கொள்கிறது. கூடுதல் தொகைக்கு பதிவு செய்யப்பட்ட பிராமிசரி நோட்டுகளை எழுதி வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி அதிக பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை எனவே மாவட்ட கலெக்டர் கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: