கொடியேற்றத்துடன் 10 நாள் பிரமோற்சவம் தொடக்கம் திரளான பக்தர்கள் வழிபாடு செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில்

செய்யாறு, பிப்.7: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார், சிவப்பிரகாசர் ஆகியோரால் பாடல் பெற்ற செய்யாறு திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் தை மாத பிரமோற்சவம் நேற்று தொடங்கியது.இதையொட்டி, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் முன் எழுந்தருளினர். அதிகாலை 4.30 மணியளவில் சிவாச்சாாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, நடந்த கேடய உற்சவத்தில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர். பின்னர், நேற்று இரவு கற்பக விருட்சம், காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.விழாவின், 2ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

Related Stories: