கட்டிட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் கட்டுமான பணிக்கு மணல் வழங்க வலியுறுத்தி

ஆரணி, அக்.31: கட்டுமான பணிக்கு மணல் வழங்க வலியுறுத்தி ஆரணியில் கட்டிடத்தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆரணியில் கடந்த சில மாதங்களாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது வருவாய், காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செய்யாற்றுப்படுக்கை, கமண்டலநாகநதி ஆகிய பகுதிகளில் இருந்து மணல் எடுத்து வந்து கட்டிட உரிமையாளர்கள் வீடுகட்டி வந்தனர்.தற்போது இப்பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறாமல் இருப்பதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்று மணலுக்கு பதிலாக எம்சாண்ட் மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்த அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆரணி சுற்றுவட்டாரத்தில் கட்டுமான பணிக்கு எங்கிருந்து எம்சாண்ட் மணல் கொண்டு வருவது என தெரியாமல் கட்டிட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மணல் பற்றாக்குறையால் மேஸ்திரி, கம்பி கட்டும் தொழிலாளி, பிளம்பிங் வேலை செய்பவர் உட்பட பல தொழிலில் ஈடுபடும் 2 லட்சம் தொழிலாளர்களின் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று கட்டுமான பணிக்கு மணல் வழங்க வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம் முன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

அப்போது, அவர்கள் கட்டுமான பணிக்கு மணல் வேண்டும்என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, கோரிக்கை வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம், நகர, கிராமிய காவல் நிலையம், ஆர்டிஓ உள்ளிட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதில் நகர தலைவர் மாரி, துணைத்தலைவர் மன்னார்சாமி உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: