கிரிவல பக்தர்கள் நள்ளிரவில் பரிதவிப்பு மாதந்தோறும் தொடரும் பரிதாபம் திருவண்ணாமலையில் போதிய சிறப்பு பஸ்கள் இல்லாமல்

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப பஸ் இல்லாமல் பக்தர்கள் தவிக்கும் நிலை இந்த மாதமும் ஏற்பட்டது.திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் கடந்த 23ம் தேதி இரவு 10.02 மணிக்கு தொடங்கி, நேற்று முன்தினம்் இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்ததால், நேற்று முன்தினம் இரவும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை நேற்று முன்தினம் நள்ளிரவில் வெகுவாக குறைத்தனர். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதனால், கிரிவலம் முடிந்து ஊர் திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் பஸ் கிடைக்காமல் காத்திருந்தனர். சுமார் 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் சென்ற சோர்வுடன், மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்ததால் கடும் அவதியடைந்தனர். அதனால், நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி இருந்தது.

பஸ் நிலையத்தில் உள்ள பயண நேர காப்பாளர்களிடம் இதுகுறித்து முறையிட்டும், சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முயற்சிக்கவில்லை. வேறோரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை, சிறப்பு பஸ்களாக மாற்றி அனுப்புகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இயக்கினால், வழக்கமான வழித்தடத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், பஸ்களின் எண்ணிக்கை குறைக்கபட்டதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனாலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்கி இருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமையும் மாதங்களில் இது போன்ற குளறுபடிகள் நடப்பது வாடிக்கையாக மாறிவிட்டது. எனவே, இனிவரும் மாதங்களில், வெளியூர் பயணிகளின் தேவைக்கு தகுந்த எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: