அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி

திருவண்ணாமலை, அக்.25: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 10.02 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது.அதையொட்டி, இரண்டு நாட்கள் பவுர்ணமி அமைந்ததால், நேற்று முன்தினம் இரவு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. நள்ளிரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேகம் நேற்று மாலை நடந்தது. சுவாமி சன்னதியிலும், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்துக்கு வெளியே வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.மேலும், நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வழி வரிசை ஏற்படுத்தியிருந்தனர். வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம், கட்டண தரிசனம் அனுமதிக்கப்பட்டது.மேலும், அன்னாபிஷேகத்தின்போது சுவாமிக்கு அன்னம் சாத்தும் சாயரட்சை காலத்தில் பக்தர்கள் தரிசிப்பது மரபு கிடையாது. எனவே, அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு, அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.அதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும், திருநேர் அண்ணாமலை கோயிலிலும் நேற்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

Related Stories: