சேத்துப்பட்டில் பரபரப்பு 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் : கருத்து கேட்பு கூட்டத்தில் 79 பேர் பங்கேற்பு

சேத்துப்பட்டு, அக்.4: எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேத்துப்பட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே கருத்து கேட்பு கூட்டத்தில் 79 பேர் கலந்து கொண்டனர். சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நிலம் அளவீடு செய்து குறியீட்டு கற்கள் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, சேத்துப்பட்டு தாலுகாவில் இத்திட்டத்திற்கு ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் 17ம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட 47 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 7 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் நேற்று 2ம் கட்ட கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் ஆட்ேசபணை மனு அளித்த 85 விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 79 விவசாயிகள் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்தையொட்டி, டிஎஸ்பிக்கள் சின்ராஜ், செந்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மன், சுரேஷ்பாபு, ராணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ள சில விவசாயிகள், செஞ்சி சாலையில் இருந்து தாலுகா அலுவலகம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது, 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டபடி சென்றனர். பின்னர், தாலுகா அலுவலக வளாகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேலிடம் மனு அளித்தனர்.

Related Stories: