கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்.4ல் அடையாள வேலைநிறுத்தம் ஜாக்டோ- ஜியோ முடிவு

சிவகங்கை, செப். 21: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ சார்பில் அக்.4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.  

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்டக் குழு கூட்டம்  நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் சங்க முடிவுகளை விளக்கி பேசினார்.  இதில் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் கூட்ட முடிவு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது: ‘‘கடந்த 2017 ஜூலை.18 முதல் ஜாக்டோ, ஜியோ சார்பில் தொடங்கிய போராட்டம் பல கட்டங்களாக நடந்தது. ஆனால் தமிழக அரசு எங்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எங்களை வலுக்கட்டாயமாக போராட தள்ளுகிறது. சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் அக்.4 அன்று தற்செயல் விடுப்பு எடுத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். அக்.13 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை சேலத்தில் முதல்வர் இல்லம் முன்பு நடத்த உள்ளோம். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் நவ.27முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: