திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு ....பதிவேடுகள் முறையாக பராமரிக்கவில்லை, கோயில் வளாகம் சுத்தமாக இல்லை

திருவண்ணாமலை, செப்.7: இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் குடிநீர், கழிவறை, கட்டணம், சுவாமி தரிசனத்தில் பாகுபாடு உள்ளதா என்பது குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து, வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள கடைகள், பக்தர்களின் பொருட்கள் பாதுகாக்கும் அறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறை அருகே பதிவெண் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் உரிமையாளர் மீது வழக்குப்பதிய போலீசாருக்கு உத்தரவிட்டார்.பின்னர், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் அன்னதானம், கோயிலின் தூய்மை, தரிசனத்தில் பாகுபாடு, கட்டண வசூல் ஆகியன உள்ளனவா? என கேட்டறிந்தார். மேலும், கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளதா? அன்னதான கூடத்தில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அன்னதான கூடம் அருகே திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயை மூடுமாறு கோயில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, கோயில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இணை ஆணையாளர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிசிடிவி கேமராக்கள், ஊழியர்கள் பதிவேடு, அன்னதானம் வழங்குவது குறித்த பதிவேடுகள், கடைசியாக தணிக்கை செய்யப்பட்ட பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது, ஊழியர்கள் பதிவேடுகள், அன்னதான திட்டத்திற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. மேலும், ஊழியர்கள் சீருடை அணியாமலும், அடையாள அட்டைகள் இல்லாமலும் இருந்ததை கவனித்தார். சீருடை, அடையாள அட்டை அணிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கருணை இல்லம், கோசாலையில் அடிப்படை வசதிகள், தூய்மை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் போதிய தரை விரிப்பான் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் வெயிலில் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். பெண்கள், முதியவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கோயில் வளாகம் சுத்தமாக இல்லை.கோயிலில் அன்னதான பதிவேடுகள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும், அன்னதானம் சுவையாக இல்லை என பக்தர்கள் தெரிவித்தனர். இந்த குறைபாடுகளை கோயில் நிர்வாகம் உடனடியாக நிவர்த்தி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது. தங்கத்தேர் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும். மேலும், கோயிலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட 15 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

கோயில் இணை ஆணையரிடம் விசாரணை

மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டதா, பக்தர்கள் நன்கொடை வழங்கினார்களா என கேட்டார். அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் தான் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார். ஆனால், தகவல் பலகையில் வேறு பெயர் எழுதி வைத்துள்ளதே என கேள்வி எழுப்பினார். இதேபோல், நீதிபதி கேட்ட பல கேள்விகளுக்கு இணை ஆணையாளர் பதில் கூற முடியாமல் திணறினார்.

கோயில் வளாகத்தில் பீர் பாட்டில்

கோயில் நான்காம் பிரகாரத்தில் கோசாலைக்கு அருகே பக்தர்கள் பொங்கல் வைத்திருந்தனர். இனி இங்கு பொங்கல் வைக்க அனுமதிக்கக்கூடாது என கோயில் ஊழியர்களிடம் தெரிவித்தார். பின்னர், அப்பகுதியில் காலியாக பீர்பாட்டில் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினரிடம் இங்கு எப்படி மதுபாட்டில் வந்தது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லையா? இனி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: