வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் சோழர்கால செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு

வேட்டவலம், செப்.7: வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் சோழர்கால செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது 11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமம் பெரிய ஏரிக்கரையில் செக்கு கல்வெட்டு இருப்பதாக, அதே கிராமத்தை சேர்ந்த முனைவர் சுப்பிரமணி என்பவர், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் பிரகாஷ், செயலாளர் பாலமுருகன், இணைச்செயலாளர் பிரேம்குமார் மற்றும் குழுவினர் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். பெரிய ஏரிக்கரையில் மண்ணில் புதைந்திருந்த கல் செக்கை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர்.ஆய்வில் அந்த கல் செக்கை சுற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. சோழர் காலம் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்த செக்கை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த செக்கில் எடுக்கப்படும் எண்ணெயில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது. மேலும், இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய், தர்மத்தை காப்பவர்களின் கால்தூசி, என் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவண் குழுவினர் கூறுகையில், `இந்த செக்கு கல்வெட்டு இவ்வூரில் கிடைத்தது அரிய கல்வெட்டு. இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கிறது. மேலும், செல்லங்குப்பத்தில் அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மேலும் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது' என்றனர்.

Related Stories: