திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை ரசீது இயந்திரம் சரிபார்ப்பு

திருவண்ணாமலை, செப்.6: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஒப்புகை ரசீது இயந்திரம் சரிபார்க்கும் பணியில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டனர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து, தயார் நிலையில் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவு எண், பார் குறியீடு போன்றவற்றை செல்போன் செயலி மூலம் சரிபார்க்கும் பணி கடந்த மாதம் நடந்தது.அதன் தொடர்ச்சியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என சரிபார்க்கும் பணி கடந்த மாதம் 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. பெல் நிறுவனத்தைச் சேர்ந்த மின்னணு பொறியாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில், உத்தேச வாக்குச்சீட்டுகளை பொருத்தி வாக்களித்து, பின்னர் வாக்கு எண்ணிக்கையின் இயந்திரத்தின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தற்போது 3,200 கன்ட்ரோல் யூனிட், 5880 பேலட் யூனிட்கள் உள்ளன. அவற்றில், நேற்று 700 மின்னணு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், யாருக்கு நாம் வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒப்புகை ரசீது இயந்திரம் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.அதையொட்டி, 3,200 மின்னணு வாக்குப்பதிவு கன்ட்ரோல் இயந்திரங்களுடன், ஒப்புகை ரசீது இயந்திரத்தை இணைத்து, பெல் பொறியாளர்கள் சரிபார்த்தனர். அப்போது, உத்தேச வாக்குச்சீட்டுகளில் வாக்களித்து, அதன் விபரம் சரியாக பதிவாகி ஒப்புகை ரசீதில் பதிவாகிறதா என்பதை, ஒவ்வொரு இயந்திரத்தின் மூலம் சரிபார்த்து உறுதி செய்யப்பட்டது.

ஒருவர் வாக்களிக்க அதிகபட்சம் 12 விநாடிகள் தேவைப்படும். அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் வாக்களித்ததும், எந்த சின்னதுக்கு வாக்களித்தோம் என்ற விபரம், ஒப்புகை ரசீது இயந்திரத்தின் திரையில் அதிகபட்சம் 7 விநாடிகள் பிரதிபலிக்கும். அதன்பிறகு, அந்த ரசீது அந்த இயந்திரத்தின் சிறிய பெட்டிக்குள் விழுந்துவிடும். ஒப்புகை ரசீது, வாக்காளர்களுக்கு வழங்குவதில்லை.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கையும், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் உள்ள ரசீதுகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு, வாக்கு எண்ணிக்கை உறுதி செய்யும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: