வடமாநில தொழிலாளர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு: களத்தில் இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கலவரத்தை ஏற்படுத்த நினைத்தவர்களின் முகத்திரை கிழிப்பு  அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பீகார், ஜார்கண்ட் மாநில அதிகாரிகள் உத்தரவாதம்

* தமிழ்நாடு அரசு அமைத்து உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தொடர்பு கொள்ள 94891 11191, 94981 81455

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர, சகோதரிகளே.! என்பது இதன் பொருள். இதை தமிழ்நாட்டு மக்கள் உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார்கள். இதனால்தான், ‘வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை’ தமிழ்நாட்டிற்கு வந்தது. தமிழ்நாட்டுக்கு சென்றால் நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான், ஒன்றும் இல்லாமல் வெறும் கையுடன் வந்த பல்வேறு மாநில மக்களுக்கு இன்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்தது தமிழ்நாடு.

அனைத்து துறைகளிலும் கோலோச்சும் முதன்மை மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் என தமிழர்களின் கையே ஓங்கி உள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் என தொடங்கி, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளதே சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் கல்விக்கு அரசும், மக்களும் முக்கியத்துவம் தருவதால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை இங்கு முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு மேற்படிப்பை முடித்துவிட்டு முன்னணி நிறுவனங்களில் சேர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். ஆனால், வடமாநிலங்களில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் அந்தந்த மாநில அரசுகள் கோட்டைவிட்டு உள்ளது. குறிப்பாக, பாஜ ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள மாநிலங்களில்தான் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களின் சதவீதமே மிக மிக குறைவாக உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

புலம்பெயர்வு ஏன்? ஒரு வேளை உணவு கிடைக்காதா என ஏங்கும் நிலையில் உ.பி, பீகார், ஜார்க்கண்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் (அப்துல் கலாம் கூறிய எதிர்கால இந்தியா) தவித்து வருகின்றனர். பல தசாப்தங்களுக்கு முன் வணிகம் மற்றும் வியாபாரத்துக்காக தமிழ்நாட்டில் அங்கும் இங்கும் வந்து சென்ற வடமாநிலத்தவர்கள், சமீப காலமாக கடும் வறுமை மற்றும் வறட்சியால் அவர்களது சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தொழில் மற்றும் வணிக நகரங்களாக திகழும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இத்தனை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. போலீஸ் அலர்ட் சமீபத்தில் திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் இடையே சிகரெட் புகையை முகத்தில் விட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். அப்போது, தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்குகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வந்தன. இதையடுத்து திருப்பூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு, மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கைகளை எடுத்து, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் தன் கணவரை அபகரித்த வடமாநில பெண்ணை தட்டிக்கேட்ட மனைவியை வடமாநில பெண்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலானது. இதெல்லாம் தனிப்பட்ட காரணங்களால் நடந்த மோதல் என்றாலும், வதந்தி மற்றும் மோதல் உருவாக்க போலீசார் இடம் கொடுக்கவில்லை.

பரவிய வதந்தி இந்த சூழலில், ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்த சூழலில், ஜோத்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் நடந்ததாக பாஜ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சில அமைப்புகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையும் பரப்பி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பியதாக, அவர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி தலைமையில் 7 பேர் கொண்ட குழு டெல்லி சென்றனர். இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் உம்ராவ் முன்ஜாமீன் பெற்றார். 10 நாட்கள் மட்டுமே முன்ஜாமீன் வழங்கி உள்ள நீதிமன்றம், தமிழ்நாட்டில் வழக்கு பதியப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி நிவாரணம் பெற்று கொள்ள உத்தரவிட்டுள்ளது. கைது படலம் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூரில் 3 வழக்குகள், கிருஷ்ணகிரியில் ஒரு வழக்கு, தூத்துக்குடியில் ஒரு வழக்கு என 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த புத்தேரியில் கடந்த 6 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ், சந்தன், சுராஜ் திவாரி, சந்தோஷ் சவுத்ரி, சஞ்சய் சர்மா, சிந்து ராம், அனுஜ் குமார் ஆகிய 7 பேர் வேலை செய்து வருகின்றனர்.

மன்னிப்பு வீடியோ இவர்களில் மனோஜ் யாதவ், ‘‘தமிழ்நாட்டில் தற்போது எங்களை அடிக்கிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவம் பார்ப்பதில்லை. நாங்கள் எப்படி ஊருக்கு வருவது என தெரியவில்லை. இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்’’ என சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு அதை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளார். பிறகு, அங்குள்ள ஒரு சில பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். அந்த செய்தியை இங்கே உள்ள நபர்களிடம் காட்டி உள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் மனோஜ் யாதவ்வை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். மற்ற 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் போலி வீடியோக்களை பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (25) என்பவரை திருப்பூர் போலீசார் கைது செய்து உள்ளனர். பாஜ ஆதரவு இணையதளமான ‘opi*dia.com’ வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பியதாக திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல், பல்வேறு அமைப்புகள் போலி வீடியோக்களை பரப்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 போலி வீடியோ தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 42 போலி வீடியோக்களை பரப்பிய பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் லட்சுமிபூர் பகுதியை சேர்ந்த அமன்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராகேஷ் திவாரி, யுவராஜ்சிங் ராஜ்புத், மணீஷ் காசியாப் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் வேண்டுமென்ற பரப்பப்பட்டதால் பீகார் மாநிலத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்ததால், ஒரு குழு அமைத்து விசாரிக்க பீகார் அரசு உத்தரவிட்டது. அதன்படி, பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில், கண்ணன் ஐஜி, தொழிலாளர் நல ஆணையர் அலோக்குமார், சந்தோஷ்குமார் ஐபிஎஸ் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவினர் தமிழ்நாட்டில் 4 நாட்கள் தங்கி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றும் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரித்தனர்.

உறுதிப்படுத்திய அதிகாரிகள் இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து புலனாய்வுத்துறை டிஐஜி தமிழ்வாணன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷம்ஷத் ஷம்சி, தொழிலாளர் நலத்துறை இயக்குநர் ராகேஷ் பிரசாத், ஜார்க்கண்ட் மாநில புலம்பெயர் தொழிலாளர் கட்டுப்பாட்டு அறை பிரதிநிதிகள், ஆகாஷ்குமார் மற்றும் சிகா லக்ரா உள்ளிட்ட 8 பேர் சென்னை, கோவை, திருப்பூரில் விசாரணை நடத்தி தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தமிழ்நாட்டில் யாரும் தாக்கப்படுவதில்லை. பரப்பப்பட்ட வீடியோக்கள் போலியானவை’ என்று பீகார், ஜார்க்கண்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களுடன் முதல்வர் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்ட எல்லையில் காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தைரியமாக இருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று நம்பிக்கை கொடுத்தார். இதுதொடர்பான விரிவான அறிக்கையை டி.ஆர்.பாலு எம்பி மூலம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதேபோல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், ‘தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு நடவடிக்கை பீகார், ஜார்கண்ட் அதிகாரிகள் விசாரித்த அனைத்து இடங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களே தெரிவித்து உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு பீகார், ஜார்கண்ட் குழுவினர் நன்றி தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில், வட மாநிலத்தவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தொடர்பான வதந்திகள் வெளியான விவகாரங்கள் தொடர்பாக மற்ற மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க ஐஜி அபினாஷ்குமார் தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசார் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும், சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சந்தித்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்கும் வகையில், தங்களது அலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை அரசியலாக்கி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த சில கட்சிகள், அமைப்புகளின் முகத்திரை போலி வீடியோக்கள் மூலம் கிழிக்கப்பட்டுள்ளது. என்னதான் வதந்திகளை பரப்பினாலும், உண்மை நிலவரம் மூலம் ‘பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

* வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை

* தமிழ்நாடு அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

* தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் (https:/*abour.t*.gov.i*/ism/)

* இவ்வலைதளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்து உள்ளார்.

* கொரோனா காலத்தில் உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசு கோவிட் பெருந்தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 4,16,047 மற்றும் இரண்டாம் கட்டமாக 4,66,025 தொழிலாளர்களுக்கும் மற்றும் கோவிட் இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் 1,29,444 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நேரடியாக சென்று வழங்கப்பட்டன. இவர்களின் நலனுக்காக பல்வேறு இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

* கணக்கெடுப்பு, ரோந்து பணி தீவிரம்

* வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தமிழகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டு வருகிறது.

* ஒரு பக்கம் குடும்பத்தை காப்பாற்ற சொந்த ஊரை விட்டு வந்த தொழிலாளர்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் கைது செய்யப்படுகிறார்கள்.

* சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அவர்களின் முழு விவரங்களை அவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கட்டாயம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

* பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல்துறை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* வெளிமாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* காவல் ஆய்வாளர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட  தொழிலாளர்களை உள்ளடக்கிய  வாட்ஸ் அப் குழுவை உருவாக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு, பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

* பிற மாநில தொழிலாளர்கள் அதிக  அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி  இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப் போது தணிக்கை செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

* குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் வார்டு  வாரியாக கணக்கெடுப்பு பணி நடத்த வேண்டும்.

* இவ்வாறு வடமாநிலத்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசு பாதுகாத்தால், இதுபோன்ற பிரச்னைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

பாதுகாப்பை உறுதி செய்யும் விளக்கக் கூட்டங்கள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர்.

Related Stories: