சுடச்சுட தயாராகிறது நாகர்கோவில் ஸ்ெபஷல் முந்திரி கொத்து!

தீபாவளி பண்டிகை காலங்களில் இனிப்பு, கார வகைகள், பேக்கரி வகை இனிப்புகள் விற்பனை ஒருபுறம் சூடுபிடித்தாலும் மறுபுறம் கிராமிய மணம் கமழும் பலகாரங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. கடைகளில் சென்று வாங்கி உண்ணும் பழக்கம் இல்லாத காலத்தில் மக்கள் வீடுகளில் சுவையான தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி கொத்து என்ற ஒருவகை பலகாரம் மிகவும் பிரபலம். அதென்ன முந்திரிகொத்து? என்று கேட்டால் அதற்கும் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். குமரி மாவட்ட மக்கள் திராட்சை பழத்தை ‘‘முந்திரிப்பழம்’’ என்று அழைப்பார்கள். இந்த முந்திரிக்கொத்தும் திராட்சை பழம் இருப்பதுபோன்று உருண்டைகள் கொத்துக்கொத்தாக காணப்படும் என்பதாகும். அதனாலேயே முந்திரி கொத்து என்று அழைக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஸ்பெஷல் முந்திரி கொத்து, அதிரசம், முறுக்கு என்று பலகாரங்களை தீபாவளி காலங்களில் வீடுகளில் செய்வார்கள். இதற்காகவே திருவைக்கல் என்ற ஒரு வகை கல் வைத்திருப்பார்கள். இப்போ அதெல்லாம் இருப்பது குறைவு.

இப்போது ஒரு சில வீடுகள் ஒட்டுமொத்தமாக தயார் செய்து விற்பனை செய்யும் பலகாரக்கடைளாக மாறிவிடுகின்றன. ஒரு வீட்டில் தயார் செய்து ஊருக்கே சப்ளை செய்கிறார்கள். சரி செய்முறையை பார்ப்போம். நாகர்கோவில், வடசேரி செட்டித்தெருவில் முந்திரி கொத்து தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகின்ற பாலமுருகன் கூறுகிறார், ‘‘அரைக்கிலோ பச்சைப்பயிறு எடுத்து கடாயில்போட்டு சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் தீஞ்சு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் பச்சை பயிறை சிறு பயிறு என்றும் அழைப்பார்கள். பச்சை பயிறு வறுத்து உடைத்து எடுத்தால்தான் ருசி அதிகமாக இருக்கும். அவ்வாறு பச்சை பயிறு வறுத்து எடுக்க தெரியாமல் இருந்தாலோ அல்லது எளிதாக செய்ய வேண்டும் என்றாலோ நேரடியாக பாசி பயிறு எடுத்துக்கொள்ளலாம்.

திருவைக்கல்லில் உடைப்பது ஒரு வகை, ஆனால் ஒரு கடாயில் கல்லை குழவிக்கல் வைத்து உரச செய்வதின் மூலமும் வறுத்த பச்சை பயிறு தோடு அகற்றலாம். மிக்சியில் உடைக்க கூடாது. அவ்வாறு உடைத்தால் தோடுடன் சேர்ந்து எல்லாம் உடைந்து விடும். தோடு முழுமையாக அகலாவிட்டாலும் பரவாயில்லை. பருப்பை தனியாக பிரித்து மிக்சியில் போட்டு சற்று உடைத்து தூளாக்கிக்கொள்ளலாம். அரை கிலோ பச்சை பயிறுக்கு முற்றிய தேங்காய் ஒன்றை எடுத்து நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனையும் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளலாம். தேங்காய் திருவும்போது துண்டுகள் ஏதும் இல்லாமல் பார்த்துத்கொள்ள வேண்டும். அப்போதுதான் முந்திரி கொத்து நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

சிறந்த பக்குவத்துடன் தயார் செய்யப்படும் முந்திரிகொத்து ஏன் ஒரு வருடம் வரை சுவையாக கெட்டுப்போகாமல் இருக்கும். அரைக்கிலோ பச்சை பயிறுக்கு அரைக்கிலோ கருப்புக்கட்டி அவசியம். அதுதான் முந்திரிக்கொத்திற்கு மணத்தையும், சுவையையும், நீண்டநாள் பாதுகாப்பையும் தரும். வெல்லம் எடுத்தும் முந்திரி கொத்து தயார் செய்யலாம். பின்னர் கருப்புகட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாகு வடிவில் அல்லாமல் சற்று தண்ணீர் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காய், சுக்கு தூள் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்து வைத்த தேங்காய் துருவல் எடுத்து பச்சை பயிறு உடைத்த மாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஏலம் சுக்கு சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் கருப்பு கட்டி நீரை வடிகட்டி அதனுடன் சேர்க்க வேண்டும்.

மாவு பிசைய பிசைய சிறிது சிறிதாக இதனை ஊற்ற வேண்டியது அவசியம். சூடு ஆறும் முன்னர் சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறிவிட்டால் உருண்டைகள் உருவாவதில் சிக்கல் வரும். உருண்டைகள் உருட்டி பின்னர் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேல் வைத்து அதன் பின்னரும் வறுக்கலாம். அதற்கு உருண்டைகளை கவர் செய்யும் வகையில் மாவு தயார் செய்ய வேண்டும். இதற்கு பச்சரிசி சிறந்தது. பச்சரிசி மாவு தயார் செய்துகொள்ள வேண்டும். பச்சரியை ஊற வைத்து தூளாக்கிக்கொள்ளலாம். மஞ்சள் தூள் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

உப்பு சிறிது சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் மாவு ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உருண்டையில் பிடித்துக்கொள்ளும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகிய பின்னர் உருண்டைகளை பச்சரிசி மாவில் முக்கி  அதனை சூடான எண்ணெயில் ேபாட்டு சிறிது சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார். இதனை கடாயில் வறுத்து வெளியே எடுக்கும்போது உருண்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் கொத்தாக காணப்படும்.

கல்யாண சீர்வரிசை, வளைகாப்பு நிகழ்வுகளில் பிரசித்தி பெற்ற முந்திரி கொத்து தீபாவளி பண்டிகை காலங்களில் சுடச்சுட தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றோம்’’ என்றார். எல்லா பண்டங்களும் கிலோ கணக்கில் விற்பனையாகும்போது முந்திரி கொத்து ஒரு உருண்டையின் விலை ரூ.6 என்கின்றனர். கொத்தாக எடுத்தாலும் விற்பனைக்கு வரும்போது பெரும்பாலும் தனித்தனி உருண்டைகளாகவே ‘‘பேக்’’ செய்யப்படுகிறது.

Related Stories: