வினைகள் அழிக்கும் வக்ரகாளி

நன்றி குங்குமம் தோழி

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக திருவக்கரை எனும் கிராமத்தின் எல்லையைத் தொடும்போதே அவ்வூரின் தொன்மை தென்றலாய் தோள் வருடிச் செல்லும். கொத்துக் கொத்தாய் காணப்படும் கல் மரங்கள் பல்லாயிரங் காலத்துப் பழமையை மனதில் வேராய் பரப்பும். நடுநாயகமாய் விளங்கும் கோயிலை வலம் வந்தால் பல்லவர்களின் ஆரம்பப் பாணியும், சோழர்களின் சிற்ப நேர்த்தியும் கண்களை நிறைக்கும்.

ஆதித்ய சோழரும், பராந்தகரும், கண்டராதித்தரும், அவர் மனைவி செம்பியன்மாதேவியாரும் பார்த்துப் பார்த்து கோயிலைச் சமைத்திருக்கிறார்கள். கோயிலோடு அவர்களும் கம்பீரமாய் நம் மனதில் நிற்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் நம்மை அழைத்துச் செல்கிறார்கள். கலையும், தெய்வீகமும் சமமாய் குழைத்து செதுக்கிய அற்புதத்தை கண்முன் நிறுத்துகிறார்கள்.

அதேபோல, அக்கோயிலுக்குள் உறையும் சந்திர மௌலீஸ்வரரும், அமிர்தாம்பிகையும், வரதராஜ பெருமாளும் யுகங்களாய் அங்கு வீற்றிருக்கின்றனர். ராஜகோபுரத்திற்கு அருகே தனியே குடிகொண்டு, அகிலத்தையே ஆட்சி செய்யும் வக்ர காளியம்மனை தரிசிக்கும்போது காலமற்ற பெருவெளியில் நிகழ்ந்த ஒரு புராணத்தை அழகாய் பகர்கிறாள்.

அதனூடே அருளையும் பகிர்ந்தளிக்கிறாள். அவள் பார்க்க வேறொரு யுகம் நம் கண்களின் முன் பரந்து விரிகிறது. அந்த அசுரனுக்கு வக்ராசுரன் என்று பெயர். உருகி வழியும் உச்சி வெயிலில் ஒரு பாறை மேல் திடமாய் அமர்ந்தான். முக்கண் நாயகனான ஈசனை தன் இதயத்தில் நிறுத்தினான். எப்போதும் திருநீலகண்டனை லிங்க வடிவாய் பிரதிமையாய் கண்டத்தில் தரித்தான்.

மெல்ல கண்கள் மூடினான். அகக் கண்களால் கனன்றிருக்கும் லிங்கத்தை பூஜிக்கத் துவங்கினான். நமசிவாய நாமத்தை தொடர்ந்து ஓதினான். வக்கிராசுரன் தன் தவத்தை உக்கிரமாக்கினான். ஈசனை நோக்கி விரைவாய் நகர்ந்தான். காலத்தை மறந்து கயிலை நாதனைப் பற்றியபடி அசையாது கிடந்தான். அசைக்க முடியாத ஈசனை அவன் தீந்தவம் அசைத்தது. ஈசன் திரும்பினார். தவழ்ந்து இறங்கினார்.

அந்தப் பாறையின் மீது ஓர் உச்சி வேளையில் பிரகாசமாய் சூரியனை மறைத்தபடி நெடிதுயர்ந்து நின்றார். உக்கிரப் பிழம்பாய் சிவந்திருந்தவனை உற்றுப் பார்த்தார். வக்கிராசுரன் வஜ்ரமாய் மாறினான். தன் மாற்றம் உணர்ந்து மெல்ல கண் திறந்தான். எதிரே நிற்கும் ஈசனை கண்கள் பனிக்கப் பார்த்தான். பரவசமானான்.

‘தான் வரம் பெறவே உம்மை நோக்கி தவமிருந்தோம்’ என்றான். அவன் வார்த்தையில் தெறித்த அலட்சிய தொனியை ஈசன் குறிப்பாய் உணர்ந்தார்.

ஈசன் மெல்லப் புன்னகைத்தார். ‘வேண்டும் வரம் கேள்’ என்றார். அவன் சிலிர்த்தான். ‘அப்படியா’ என்று ஆச்சரியமாய் கேட்டான். சட்டென்று நிமிர்ந்து ‘சாகா வரம் வேண்டும்’ என்றான்.

‘‘இந்த பூலோகத்திலும், தேவலோகத்திலும் என்னை யாராலும் வெல்ல முடியாத வலிமை வேண்டும்’’ என்றான். ஈசனும் இசைந்தார். அவன் வேண்டிய வரங்களை சக்தி ரூபமாய் அவன் இதயத்தில் பொதித்தார். வக்கிராசுரன் உடல் ஒருமுறை அதிர்ந்து குலுங்கியது. அவன் வலிமை அவனுக்கே வியப்பாய் இருந்தது. வியப்பை மறைத்து அட்டகாசமாய் சிரித்தான்.

வரம் பெற்ற கைகளோடு எங்கே அந்த தேவக்கூட்டம் என கொக்கரித்தான். ‘இப்போது வாருங்களடா போருக்கு’ என்று தரை உதைத்தான். எதிரே நிற்கும் ஈசனை மறந்தான். ஈசனும் மெல்ல நகர்ந்தார். வரம் பெற்ற வக்கிராசுரன் வதம் செய்யப்படுவான் என்று மட்டும் நினைத்தார். வைகுண்டவாசனான விஷ்ணுபதி வக்கிராசுரன் பக்கம் திரும்பினார்.

அவர் கையிலுள்ள சக்ராயுதம் அதிவேகமாய் சுழன்றபடி இருந்தது. வக்கிராசுரன் வரம் பெற்ற கையோடு தேவர்களை போருக்கு அழைத்தான். இந்திரனை இறுமாப்போடு பார்த்தான். பெரிய படையோடு சென்று தேவலோகத்தையே துவம்சம் செய்தான். பதுங்கி ஓடிய தேவர்களை பாய்ந்து பிடித்தான். வக்கிராசுரனை விட அவன் தங்கையான துன்முகி மூர்க்கம் கொண்டவளாய் விளங்கினாள்.

துன்பம் கொடுப்பதையே துன்முகி வழக்கமாக்கிக் கொண்டாள். அண்ணன் பெற்ற வரங்களை தான் உபயோகித்துக் கொண்டாள். தேவலோகத்து நங்கைகளை தன் கூரான நகத்தால் குத்தினாள். அலறி ஓடியவர்களை தொடர்ந்து விரட்டினாள். இவள் பெண்ணா பெரும்பூதமா என்று திணறி நின்றார்கள். திகைப்போடு அவளையே பார்த்தார்கள்.

தேவக்கூட்டத்தின் ஒரு சிறு குழு தப்பித்தது. நேரே கயிலை நாதனின் கால் பற்றி அழுதது. வக்கிராசுரனின் அக்கிரமம் தாங்காது தேவலோகப் பெண்டிர்கள் அலறுவதைச் சொன்னது. ருத்ரன் கண்கள் சிவந்து ரௌத்ரமானார். சிவந்த கண்களை மூடினார். வரம் கொடுத்தவர் வதம் செய்யலாகாதே என நினைத்து வைகுண்டவாசனைப் பார்த்தார். அவன் வதம் செய்யப்பட வேண்டிய காலம் அருகே வந்துவிட்டதை உணர்த்தினார்.

அந்த தேவக்கூட்டம் ஈசனின் இணையிலா கருணையை புரிந்து விம்மியது. ஈசனின் தாள் பணிந்தது. வக்ராசுரன் எதிரே விஷ்ணு வெடிச்சிதறலாய் இறங்கினார். அவர் கையிலுள்ள சக்கராயுதம் திகழ்ச் சக்கரமாய் சுழன்றது. வக்கிராசுரன் வந்திருப்பது யார் என்றும் பாராமல் எதிர்த்தான். போருக்கு அழைத்தான். விஷ்ணு வக்கிராசுரனை கடுமையாகத் தாக்கினார்.

சக்கரத்தை அவன் மீது பிரயோகிக்க... அவனை அது இரண்டாய் வகிர்ந்தது. மலைபோல் இருந்தவன் நொறுங்கி சரிந்தான். பெருங்குரலெடுத்து அலறினான். வக்கிராசுரனின் அலறல் துன்முகியின் காது குண்டலங்களில் எதிரொலித்துத் திரும்பியது. அவள் இப்போது பெருங்கோபம் கொண்டாள். தேவர்களின் கோட்டையில் பேயாட்டம் ஆடினாள்.

எதிர்ப்பட்டோரையெல்லாம் வெட்டிச் சரித்தாள். தேவலோகம் முன்னிலும் அதிகம் மிரண்டது. ஒட்டுமொத்த தேவக்கூட்டமும் ஈசனின் சந்நதியை நெருங்கியது. சந்நதியை கண்ணீரால் நனைத்தது. அந்த கருணாசொரூபமான தம்பதிகள் முன்பு கலங்கி நின்றது. பார்வதி தேவியிடம் தேவலோக நங்கைகள் விஷயம் கூற, பார்வதி தேவி பரிதவித்தாள். ஈசனைப் பார்த்தாள். ஈசனும் பார்க்க சிவசக்திகள் அங்கு சங்கமித்தது.

பிரபஞ்சத்தின் இரு சக்திகள் ஒன்றாகியது. ஒன்றானது... பன்மடங்காய் பெருகியது. ஒரு புயல் போல சுழன்று சுழன்று எழுந்தது. முற்றிலும் வேறொரு உருவத்தில் பரவிப் பாவியது. பார்வதி தேவி அதிபயங்கர ரூபமான காளியாய் கிளர்ந்தெழுந்தாள். யாதுமாகி நிறைந்து நின்றாள். அதைப் பார்த்த தேவர்கள் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

கைகூப்பி தொழுதார்கள். அவர்கள் பார்த்திருக்கும்போதே அந்த திவ்ய ரூபம் தொலைதூர வானத்தில் வக்ரகாளியாய் நிமிர்ந்தது. கரிய நிறத்தவளாய், கார் மேகச் சடையுடையவளாய், சிரசுக்குப் பின்னே நாற்புறமும் தீக்கங்குகள் பாய தீப்பரப்பும் செந்தழலாய், கனன்று சிவந்த கண்களாய், கபாலத்தை தன் கிரீடமாய் கவிழ்த்து கொண்டிருப்பவளாய், எட்டு திருக்கரங்களோடு திக்கெங்கும் படர்ந்து நின்றாள்.

வலது புறக்கைகளில் சக்கரம், வாள், காட்டேரியுமாய் கையில் ஏந்தினாள். மெல்ல நடந்தாள். வானத்தில் மின்னல் வெட்டியது. எட்டு திக்குகளும் ஒளியும் இருளுமாய் மாறிமாறி அடங்கியது. துன்முகி எங்கே என்று அந்த மகா சக்தி தேடியது. துன்முகி தொலைவே ஆர்ப்பாட்டமாய் ஆர்ப்பரிக்கும் சிரிப்போடு அலைந்து கொண்டிருந்தாள். தேவர்களை துரத்தியபடி இருந்தாள்.

ஓட முடியாத மானிடர்களை மடக்கிப் பிடித்தாள். அவர்களை அழுத்திப் பிழிந்தாள். உயிரோடு குடித்தாள். மானிடர்களின் ஓலத்தால் பூலோகமே அதிர்ந்தது. பெரும் அதிரலோடு காளி துன்முகியின் முன்பு இறங்கினாள். துன்முகியை உறுத்துப் பார்த்தாள். சக்கரத்தை அவளை நோக்கிச் சுழற்றினாள். சட்டென்று நின்றாள். துன்முகி கர்ப்பிணியாய் இருப்பதைப் பார்த்தாள்.

உள்ளே இருப்பது அரக்க சிசுவாக இருந்தாலும் கர்ப்பம் தரித்தவளை அப்படியே வதம் செய்வதாகாது என தர்மம் புரிந்து தயங்கினாள். துன்முகி ஆத்திரமாய் காளியை நோக்கினாள். ஆங்காரமாய் அவள் மீது பாய்ந்தாள். தொடர்ச்சியாய் தாக்கினாள். வக்ரகாளி அவள் வலக்கையை பிடித்து திருகினாள். தன் மடி மீது கிடத்தினாள். தன் சக்கரத்தால் வயிற்றைக் கிழித்தாள்.

அந்த சிசுவை அள்ளி எடுத்தாள். துன்முகி துடித்தாள். வக்ரகாளி தன் வலது காதில் அந்த சிசுவின் பிரேதத்தை குண்டலமாகச் சூடினாள். குண்டலம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. காளியின் சாந்நித்யத்தால் அரக்க சிசு தன் சொரூபம் மாறி தேவியோடு கலந்தது. துன்முகியை தூக்கிப்பிடித்து இரண்டாய் வகிர்ந்தாள்.

அதையும் மீறி வேகமாய் வந்த அரக்க கூட்டத்தின் தலையை திருகி தூக்கிப் போட்டாள். தலைகளை மாலையாய்த் தொடுத்தாள். தொடுத்ததை மார்புக் கச்சையாக்கி கட்டிக்கொண்டாள். அரக்கிகளின் உடலை கிழித்து முண்ட மாலையாக்கி முப்பிரி நூலாக அணிந்தாள். மிக உக்கிரமாய் வதம் முடித்து பூலோகத்தை ரட்சித்தாள். இடப்புறக் கைகளில் உடுக்கையும், கேடயமுமாய் மெல்ல நடந்தாள்.

மெல்ல நகர்ந்து தொண்டை மண்டலத்திலுள்ள அந்த சுட்டெறிக்கும் பாறை பிரதேசத்தில் விசித்திர கோலத்தில் அமர்ந்தாள். மக்களைக் காக்கும் பொருட்டு திடமாய் தன்னை இருத்திக் கொண்டாள். வெளிப்புறத்தில் பக்கத்திற்கு இரண்டாக நான்கு துவாரபாலிகைகளை பின்னர் தன்னோடு அழைத்துக்கொண்டாள்.

வக்ரகாளி எனும் நாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இன்றும் சந்நதியின் அண்மை வெம்மையாய் உக்கிரத்தோடு உள்ளது. வலது காலை மடக்கி, இடது காலை கீழே படரவிட்டு, இடது கைவிரல்களை லாவகமாய் மடித்து ஆள்காட்டி விரல் தன் பாதத்தைச் சுட்டுவதுபோல அமர்ந்த கம்பீரம் அவள் பாதம் பணிய வைக்கிறது. கோபக்கனலின் மத்தியில் பொங்கும் சிரிப்பாய் திகழும் வக்ரகாளியின் பேரழகு  வியப்பூட்டுகிறது.

காளியன்னை சற்றே தன் தலையை சாய்த்து பார்க்கும் விதம் காண்போரை நெகிழ்த்தும். அதன் மையமாய் அன்னையின் உதட்டில் வழியும் புன்சிரிப்பில் காளியன்னை தன் உக்கிரத்தை மென்மையாய் மறைத்து, கருணையாய் தன்னை வெளிப்படுத்தும் பாங்கை உற்றுப் பார்த்தால் உள்ளம் கதறும். சிலசமயம் ஒரு பேரிளம் பெண் உயிரோடு இளகுவதும், உதடு பிரித்துப் பேசுவது போலும் பார்த்தால் உடல் விதிர் விதிர்த்துப்போடும்.

குங்குமமும், மஞ்சளும் கலந்த ஒரு சுகந்தம் அந்த சந்நதியில் சுழன்றபடி இருக்கும். அருகே வருவோரை செம்மைப்படுத்தும். அபிஷேகம் முடித்து, அலங்கார கோலத்தில் நாளெல்லாம் அம்பாளைப் பார்க்க கண்களின் நீர் கன்னம் வழிந்தோடும். கண்கள் மூட மனம் வானமாய் மாறும்.

சற்று உள்ளே நகர்ந்து சந்திர மௌலீஸ் வரர் கோயிலுக்குச் சென்றால் கயிலையில் நிற்கின்ற ஓர் உன்னத உணர்வு உடலெங்கும் பெருக்கெடுக்கிறது.

ஈசன் இங்கு மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். வேறெங்கும் காணமுடியாத அற்புதக் காட்சி இது. அதற்கு அருகே நடராஜர் சந்நதியில் எம்பெருமான் இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி வக்ர தாண்டவம் ஆடுகிறார். அதேபோல ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்தி, மூலவரெல்லாம் நேர்கோட்டில் இல்லாமல், ஒன்றைவிட்டு ஒன்று விலகி வக்கிரமாகி இருக்கும்.

எனவே, நவக்கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும்போது ஏற்படும் தொல்லைகளும், தீய சக்திகளால் ஏற்படும் துன்பங்களும் இத்தலத்து வக்ர காளியையும், ஈசனையும் பார்த்த மாத்திரத்தில் பஞ்சாய் பறந்து போகும். வரதராஜப் பெருமாள் வக்கிராசுரனை வதம் செய்த கோலத்துடன், கையில் பிரயோகச் சக்கரமும், சங்கும் ஏந்தி அபய வரத ஹஸ்தத்துடன் அற்புதமாய் காட்சியளிக்கிறார்.

தனி சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார். அம்பாள் அமிர்தாம்பிகை தன் பெயருக்கேற்றார்போல் அமுதைப் பொழிகிறாள். அதேபோல் குண்டலினி சித்தரின் சந்நதி தனியே உள்ளது. உள்ளே நுழைந்து தனியே அமர பேரமைதியில் நம்மை முகிழ்த்துகிறது. மெல்ல எழுந்து அவ்விடம் விட்டு நகர நாம் நம்மிடம் இல்லாததுபோல் உணர வைக்கிறது. திருவக்கரை செல்லுங்கள். அகிலம் அனைத்தும் காக்கும் களிப்பூட்டும் காளியை கண்ணாரக் கண்டுகளியுங்கள்.

தொகுப்பு: கிருஷ்ணா

Related Stories: