நானே நயன்தாரா, நானே சமந்தா! மேக்கப் ஆர்டிஸ்ட் தீக்சிதா

நன்றி குங்குமம் தோழி

எந்த பெண்ணுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில்  நிச்சயம் ஆசை இருக்கும். அதிலும் திரையில் காணும் நயன்தாரா, த்ரிஷா, தீபிகா படுகோன், சமந்தா போல் எல்லாம் தோற்றம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள். எதற்குக் கிடைக்க வேண்டும்? முயற்சி செய்தால் நம் முகத்தில் அத்தனைப் பேரையும் கொண்டு வர முடியும் என ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்  மேக்கப் ஆர்டிஸ்ட் தீக்சிதா.

‘சொந்த  ஊரு சேலம், விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். அம்மா மேக்கப் ஆர்டிஸ்ட். அவங்களைப் பார்த்து அப்படியே மேக்கப் மேல எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவங்களைப் போல் இல்லாமல் இதில் அடுத்த வெர்ஷனுக்கு போகணும்ன்னு நினைச்சேன். அதனால் என்னை இந்த துறையில் அப்டேட் செய்ய ஆரம்பிச்சேன். இதற்காக லண்டனுக்கு பறந்தேன். அங்கு மேக்கப் துறையில் என்னை நான் அப்டேட் செய்துக்கிட்டேன்.

இப்ப கடந்த மூணு வருஷமா மேக்கப், பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட்டா இருக்கேன். பிரைடல் மேக்கப் போகும் போது, மணப்பெண்கள் பலர் குறிப்பிட்ட படத்தில் வரும் கதாநாயகிகள் போல் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் செய்ய முடியுமான்னு கேட்டாங்க. அவர்களின் அந்த தேவை தான் என்னை யோசிக்க வைத்தது. ஹீரோயின்களுடைய போஸ்டர்கள், ஸ்டில்களை அப்படியே மேக்கப்ல கொண்டு வர முடியாதான்னு தோணுச்சு.

தமன்னாவுடைய ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில். அதைதான் முதலில் நான் முயற்சி செய்தேன். முதலில் எனக்கு நானே முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் பயங்கர பிளாப். கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம இருந்தது. நான் நானாகவும் இல்லை, தமன்னா போலவும் இல்லை. வேறு மாதிரி இருந்தேன். என்னை பார்த்திட்டு பலர் கிண்டல் எல்லாம் செய்தாங்க. இதெல்லாம் தேவையா? ஏதோ கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டோமா, நாலு காசு பார்த்தோமான்னு இல்லாம, தேவை இல்லாம இந்த வேலை எல்லாம் எதுக்குன்னு சிலர் கேட்கவே செய்தாங்க.

அதனால் நானும் என் மனசை தேத்திக் கொண்டு, எதுக்கு ரிஸ்க்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன்’’ என்றவரின் எண்ணத்துக்கு தீ மூட்டியுள்ளார் தீபிகா படுகோன்.‘‘பாஜிராவ் மஸ்தாணி’ படம் வெளியான நேரம். அதில் தீபிகாவை பார்த்ததும் எனக்குள் புதைந்த ஆசை மெல்ல எட்டிப் பார்த்தது. முதல் முறையே சரியாக வரணும்ன்னு இல்லையே. மறுபடி மறுபடி டிரை செய்தால் தானே அதன் இலக்கை அடைய முடியும். அதனால் இந்த முறை கொஞ்சம் சீரியஸா, புரஃபஷனலா நண்பர்களுடைய உதவியுடன் சேர்த்து செய்தேன்.

என்னால் என் கண்களை நம்பவே முடியல. தீபிகாவின் மறு உருவத்தை என்னால் அப்படியே மேக்கப் மூலம் கொண்டு வர முடிந்தது. என்னை யாரெல்லாம் கிண்டல் செய்தாங்களோ அவங்க எல்லாரும் வாயடைத்து போனாங்க. ஏளனமா பேசினவங்க எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. சிலர் அடுத்து எந்த ஹீரோயின்னு கேட்டாங்க. எனக்கே ஒரு உற்சாகமும், ஊக்கமும் கொடுத்த மாதிரி இருந்துச்சு.

அப்பறம் என்ன வாரம் ஒண்ணு அல்லது ரெண்டு ஹீரோயின்னு மேக்கப், காஸ்டியூம் எல்லாம் பக்காவா ரெடியாகி போட்டோ புடிச்சு ஃபேஸ்புக்கில் போட ஆரம்பிச்சேன். நிறைய ஃபாளோயர்கள் வர ஆரம்பிச் சாங்க. சிலர் புகைப்படங்கள் அனுப்பி இந்த மாதிரி போட்டோ ப்ளீஸ்னு கேட்க செய்தாங்க. அட மேக்கப்தானே இதெல்லாம் சாதாரணம்னு நினைச்சு சில கல்யாண பெண்கள் எனக்கு நயன்தாரா, சமந்தா மாதிரி மேக்கப் செய்துவிடுங்கன்னு வந்தாங்க. நானோ அவங்களுக்கு என்ன செட் ஆகுமோ அதைதான் செய்யணும்னு சொல்லிடுவேன்.

ஏதோ ஃபிரண்ட்ஸ் மீட், வீட்ல விசேஷம்னா ஓகே, அதெல்லாம் மேக்கப் செட் ஆகலைன்னா கூட பெரிய விஷயம் இல்லை. ஆனால் கல்யாணம் வேற அதெல்லாம் வாழ்க்கைல ஒரு நாள் தான். அதுல போய் ரிஸ்க் எடுக்கக் கூடாது. உங்க கல்யாணம் நீங்க நீங்களா இருக்கணும்னு சொல்லிடுவேன். இதையெல்லாம் நான் சும்மா செய்யறதில்லை.

ஒரு ஹீரோயின் போட்டோ எடுத்துக்கிட்டா அதுல காஸ்டியூம், ஹேர்ஸ்டைல், லுக், ரியாக்‌ஷன், எக்ஸ்பிரஷன் இப்படி எல்லாமே சேர்ந்து தான் என்னுடைய புகைப்படம் இருக்கும். வெறுமனே மேக்கப் மட்டுமே போட்டா அந்த லுக் கொடுத்திடாது’’ என்ற தீக்சிதாவிற்கு அவரின் அம்மாதான் மாஸ்டராம். எந்த மேக்கப் முடித்தாலும் அவர் ஓகே சொல்லிய பிறகுதான் தனது நண்பர்களுக்குக் கூட பகிர்வாராம். வீட்டில இருக்கவங்க சப்போர்ட் செய்தாலே பெண்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்கிறார் இந்த மேக்கப் மங்கை.

-ஷாலினி நியூட்டன்

Related Stories: