இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியங்களும் வழங்கப்படுகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்கின்றன. ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தசூழலில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் வேகன்-ஆர் காரை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வேகன்-ஆர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் வேகன்-ஆர் காருக்கு ‘’செக்’’ வைக்க ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வேகன்-ஆர் காருக்கு போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.