எலி காய்ச்சல் எச்சரிக்கை

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, மனிதனுக்குப் பல வகையிலும் பிரச்னைகள்தான். ஒரு பக்கம் வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு, ஆடு, மாடு முதலான கால்நடைகள் உயிரிழப்பு என பொருளாதாரம் அடிப்படையில் இழப்பு உண்டாகி ஏராளமான சிக்கல்களால் அவதிப்படுவான்.

இன்னொரு பக்கம் கொசு, எலி போன்ற உயிரினங்களிடம் இருந்து தண்ணீர் மூலமாகப் பரவும் மலேரியா, டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் (Leptospirosis) ஆகிய உயிர்க்கொல்லி நோய்களால் தொல்லைக்கு ஆளாவான். இதில் சமீபகால அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது எலிக்காய்ச்சல். இதுபற்றி பொதுநல மருத்துவர் செல்வி விளக்குகிறார்.

‘‘மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் நடக்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் லெப்டோஸ்பைரா எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் (Leptospirosis) வரும்.

எலிகளின் கழிவுகளான சிறுநீர், மலம் கலந்த தண்ணீரைச் சுகாதாரம் அற்ற நிலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துதல் நீரை கொதிக்க வைத்து, நன்றாக வடிகட்டி குடிக்காதது, எலிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து போதல் (தகுந்த காலணிகள் உபயோகிக்காமல் இருத்தல்; இதனால், நகக்கண் வழியாக அக்கழிவுகளில் உள்ள கிருமிகள் உடலினுள் செல்லுதல்) போன்றவை காரணமாக எலிக்காய்ச்சல் பெரும்பாலானோரைத் தாக்குகிறது.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்கள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், எலிக்காய்ச்சல் பற்றி இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே, நோய்த்தடுப்பு முயற்சியில் அரசும், பொதுமக்களும் இன்னும் எச்சரிக்கையோடு இருப்பதே நம்மை எலிக்காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். இது எலி என்று மட்டும் அல்லாமல் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் கழிவுகளாலும் ஏற்படலாம்.

இதுபோன்ற பிராணிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரை சமையலுக்குப் பயன்படுத்துவது, குடிப்பது, உடலைச் சுத்தம் செய்வது போன்ற சூழல்களினால் இந்த நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, முகம் கழுவும்போதும் குளிக்கும்போதும் எலிக்காய்ச்சலை உருவாக்குகிற பாக்டீரியாக்கள் கண்களின் மூலமாக பரவிவிடுகின்றன.

அதேபோல் சாலைகளில் தேங்கும் மழைநீர், கழிவுநீர் ஆகியவற்றில் நடந்து செல்லும்போது கை, கால்களில் உள்ள காயங்கள், பாதங்களின் அடிப்பகுதியில் உள்ள வெடிப்புகள் வழியாகவும் இந்த வகை கிருமிகள் பரவி எலி காய்ச்சலை உண்டாக்குகின்றன. எலிக்காய்ச்சலின் ஆரம்ப நிலையில் சாதாரண காய்ச்சலைப் போன்றுதான் தென்படும். தலைவலி, வாந்தி ஏற்படலாம்.

உடல் மற்றும் தசைப்பகுதிகளில் தாங்க முடியாத வலி தென்படும். எனவே, சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிடாமல், ரத்தப்பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அந்த பரிசோதனை முடிவில் எலிக்காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் கட்டமாக மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிட்டு வரலாம்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசி அல்லது மாத்திரைகள் வழியாக, இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் எலிக்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தால் அந்த நபருக்கு நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்பு அடையக் கூடும். மேலும் ரத்தக்கசிவும் உண்டாகும். 10 சதவீதம் வரை மூளைக்காய்ச்சலும் வரலாம். எனவே, எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், சமயங்களில் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும்.

எலிக்காய்ச்சல் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு அரிதாகவே பரவும். அதேவேளையில், தாய்மை அடைந்த பெண்களுக்கு எலி காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அவர் மூலமாக முதல் 3 மாதங்கள் வரை சிசுவுக்கு எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே, 10 நாட்களுக்கு ஆன்டி பயாடிக் மாத்திரைகளைக் கருவுற்ற பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டும்.

எலிக்காய்ச்சலுக்கு தற்போது நம்மிடம் மருந்துகள் இல்லை. Supportive medicine-தான் இருக்கிறது. எனவே, நோயின் தீவிரம் என்பது சிகிச்சையை மீறி நடைபெறுகிறது. இதனால், மழைக்காலங்களில் வெளியே சென்று வந்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கை, கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். குளிக்க வேண்டும்.

கழிவு நீரை வெளியேற்றுதல், அந்நீர் செல்லும் வழியில் உள்ள அடைப்பை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவோர், வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு சாதனங்களான மாஸ்க், கிளவுஸ், ஷூ அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் எலி காய்ச்சல் போன்ற உயிர்கொல்லி நோய்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் பொது நல மருத்துவரான செல்வி.

தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்து கொள்வதும், வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும்

எலிக் காய்ச்சலை  தவிர்க்க உதவும்.

- விஜயகுமார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: